தமிழ்த் திரையுலகில் போலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாக எச்சரிக்கிறார் மூத்த செய்தியாளர் வலைப்பேச்சு ஆர்எஸ் அந்தணன்.
பல புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக சில போலிகள் ஏமாற்றுவதால்தான், இவ்வாறு தாம் எச்சரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடிகர் கமல்ஹாசனின் சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டும் அவர், அனைத்து நிறுவனங்களும் இவ்வாறு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ்த் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் ஏராளமானோர் அந்தக் கனவுலகை நோக்கி வருகிறார்கள். இத்தகையவர்களைக் குறிவைத்து போலிகள் செயல்படுகின்றனர்.
“முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு நல்ல நடிகர்களையும் கலைஞர்களையும் தேர்வு செய்துதரும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சில அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றுவதே இந்தப் போலிகளின் வழக்கமாக உள்ளது.
“இத்தகைய போலியான நபர்கள், நிறுவனங்களை நம்பி பலர் பணத்தையும் தங்கள் பொன்னான நேரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகிறார்கள்.
“இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்களைத் தேர்வு செய்துதர எந்த முகவர்களையும் (casting agent) தாங்கள் நியமிக்கவில்லை என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் பலர் ஏமாந்துபோகாமல் இருப்பது உறுதியாகிறது.
“நானும்கூட ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ஒருசிலரை யாரோ ஏமாற்றிவிட்டதாக நினைத்தேன். ஆனால் ஒரு புதுப் படத்தைத் தொடங்கும் முன்பே இத்தகைய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
“மற்ற முன்னணி நிறுவனங்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்,” என்கிறார் மூத்த செய்தியாளர் ஆர்எஸ் அந்தணன்.

