தமிழ்த் திரைத்துறையில் தம் தந்தையின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகித் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் சிம்பு.
ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
இதற்கிடையே, சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகின.
மணிரத்னத்தின் படத்திற்குப் பிறகு, ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்டிஆர் - 49’ படத்திலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் - 50’ படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு ஆகியோருடன் இயக்குநர் கே. எஸ் ரவிக்குமார் கலந்துரையாடுவது போன்ற நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
அப்போது சிம்புவிடத்தில், நீங்கள் நடிக்கவிருந்த ஐம்பதாவது படத்தின் தயாரிப்பிலிருந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் விலக, தற்போது அப்படத்தை நீங்களே தயாரிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிம்பு பதிலளிப்பதற்கு முன்பே கமல் குறுக்கிட்டு, ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரது ஐம்பதாவது படத்தின் தயாரிப்பிலிருந்து நாங்கள் விலகினோம் என பதிலளித்தார்.
மேலும், எமது தயாரிப்பு நிறுவனம் அப்படத்தைத் தயாரித்திருந்தால் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவால் நடித்திருக்க முடியாது அந்த வகையில், நாங்கள் சிம்புவை தியாகம் செய்தோம் என்று கூறினார் கமல்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, 50வது படத்தில் திருநங்கையாக நடிக்க விரும்பும் காரணம் குறித்து சிம்புவிடம் கேட்கப்பட்டது.
“அப்படத்தில் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதால் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது முந்தைய படங்களிலிருந்து ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்,” என அவர் பதிலளித்தார்.
தயாரிப்பாளராக மாறியது குறித்து கூறுகையில், “நானே தயாரிப்பது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் கற்பனை செய்யும் மாதிரியான திரைப்படத்தைச் சமரசம் இல்லாமல் என்னால் உருவாக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்றார் சிம்பு.