‛விருமாண்டி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது தனது இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ளார் அபிராமி. சமீபத்தில் ‛வேட்டையன்’ படத்தில் நடித்த அவர் கமலுடன் இணைந்து ‛தக் லைப்’ படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில், தனக்கு கல்லூரியில் சேரப் பரிந்துரைக் கடிதம் அளிக்க கமல் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
‛‛விருமாண்டி படத்தில் நடித்தபோது நான் அமெரிக்காவில் ஓகியா பகுதியில் உள்ள வூஸ்டர் கல்லூரியில் சேர விரும்பினேன். பிரபலமான ஒருவரின் பரிந்துரைக் கடிதம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்,” என்றார் அபிராமி.
“அப்போது கமலுடன் விருமாண்டி படப்பிடிப்பில் நடித்து வந்தேன். அதனால், இது பற்றி அவரிடம் கூறி பரிந்துரைக் கடிதம் கேட்டேன். ஆனால் பரிந்துரைக் கடிதம் தர முடியாது எனக் கூறியவர், திரைத்துறையை விட்டு நீ போகக்கூடாது எனக் கூறினார்,” என அபிராமி தெரிவித்தார்.
“இது எனது பலநாள் கனவு என்பதால், கல்லூரியில் இருந்து அழைப்பு கடிதம் வந்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டேன்,” எனச் சொன்னார் அபிராமி.

