அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடந்த சினிமா தொடர்பான கண்காட்சியில் கலந்துகொண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை எவ்வாறு திரையில் கொண்டுவரலாம் என்பது பற்றிக் கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்றார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தமது 234வது படமான ‘தக் லைஃப்’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இந்தியன் 3’ல் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார். இதுதவிர சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். அது அவரது 237வது படம்.
சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் கமல். மௌன படம், டிடிஎஸ் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் சினிமா என சினிமாவின் அடுத்த கட்டத்தை அவரே முன்னெடுத்திருக்கிறார்.
மக்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் கைத்தொலைபேசியில் படம் பார்ப்பார்கள் என்று அவர் சொன்னபோது யாரும் நம்பவில்லை. இப்போது அது நடந்திருக்கிறது.
இனி அடுத்தகட்டமான ஏஐ தொழில்நுட்பத்தின்மீது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். அதைக் கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகசில் நடந்து வரும் சினிமா தொடர்பான அனைத்துலக தொழில்நுட்பக் கண்காட்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பங்கள் கலைத்துறையில் எவ்வாறு செயல்படவுள்ளன என்பது பற்றி இவ்வாண்டு நிகழ்ச்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.