சிம்புவை அரசியலுக்கு இழுக்கும் கமல்

சிம்புவை அரசியலுக்கு இழுக்கும் கமல்

2 mins read
c7411607-2933-4979-8766-65a80c3d71ae
‘தக் லைஃப்’ படத்தில் கமல், சிம்பு. - படம்: ஊடகம்

‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சிம்புவைப் பார்த்து சொன்ன ஒரு விஷயம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

நடிகர்கள் கமல்ஹாசனும் சிம்புவும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சாய்ராம் கல்லூரியில் மே 25ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், மணிரத்னம், திரிஷா, சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்துகொண்டது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “தம்பி சிம்பு போகப்போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. உங்களுக்குக் கடமை இருக்கிறது. இந்த ரசிகர் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்தப் பொறுப்போடு இனிமேல் நீங்கள் நடந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ஏற்கெனவே பொறுப்போடுதான் இருக்கிறீர்கள். அந்தப் பொறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. அது சுமையல்ல. சுகம். அந்தச் சுகத்தை அனுபவியுங்கள். அதைப்பார்த்து நானும் அனுபவிப்பேன்,” என கூறினார்.

கமலின் இந்தப் பேச்சில் அவர் சிம்புவைப் பார்த்து, நீங்கள் தலைவன் என சூசகமாகச் சொன்னது, கமல் சிம்புவை அரசியலுக்குள் இழுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிம்புவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் கமலைவிட அதிகமானது. அது ‘தக் லைஃப்’ விழாவில் கண்கூடாகத் தெரிந்தது. சிம்பு பேசினாலே அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களும் விசில்களும் பறந்தன. அதைக் கவனித்த கமல் அவரிடம் அரசியல் ஆசையைத் தூண்டும் விதமாகப் பேசியிருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

விஜய்க்கு போட்டியாக சிம்பு?

கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி திமுகவில் ஐக்கியம் ஆனதில் இருந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் விஜய்யின் ‘தவெக’ கட்சி பற்றி பலராலும் பேசப்பட்டு வருகிறது.

ஒரு வேளை அவருக்குப் போட்டியாக சிம்புவை அரசியலில் இறக்கிவிட முயல்கிறாரா கமல் என்கிற கேள்வியும் அவரின் இந்தப் பேச்சுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. ஆனால், சிம்பு தன்னுடைய அரசியல் ஆசையை இதுவரை வெளிப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசிம்புகமல்