“நமது அன்றாட வாழ்க்கையில் சொடக்குப் போடும் நேரத்தில் சில மாற்றங்கள் நடக்கும். அப்படி ஒரு நொடியில் நடக்கும் அசாதாரண மாற்றங்களும், எதிர்பாராத நிகழ்வுகளும்தான் ‘சொடக்கு’ படத்தின் மையக்கதை,” என்கிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி.
ஒருவருக்கு நாளை நடப்பது இன்றே தெரிந்துவிட்டால் அவரது வாழ்க்கை எப்படிப் புரட்டிப்போடப்படும்? அதனால் ஏற்படும் குழப்பங்களை மனிதன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறாராம்.
மலேசியாவை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில், எதிர்காலத்தைக் கணிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார்.
நட்டி நட்ராஜ் மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கயல் ஆனந்தி கதையின் முக்கியமான அச்சாணியாக திரையில் வலம் வருவாராம்.
“விதார்த், ரக்ஷிதா இணை இக்கதையின் திருப்பங்களுக்கு முக்கியப் பலமாக அமைந்துள்ளனர். இப்படத்திற்காக இயக்குநர் லிங்குசாமி முதன்முறையாக ஒரு காதல் பாடலை எழுதியுள்ளார். அதேபோல, இயக்குநர் சரண் இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். தன் நண்பர்களுக்காக இவர்கள் இருவரும் முதன்முறையாக மாற்றுப் படத்திற்குப் பங்காற்றியிருப்பது கூடுதல் சிறப்பு.
‘குரங்கு பொம்மை’ படத்தில் ஒளிப்பதிவில் அசத்திய உதயகுமார், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அழகாகப் படம்பிடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியில் பயின்ற அபிஷேக்கின் பின்னணி இசை, படத்திற்கு உயிரோட்டம் அளித்துள்ளது.
“ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள். `இப்படித்தான் படம் செய்ய வேண்டும்’ என்று முன்னாளில் சில அம்சங்கள் இருந்தன. இப்போதெல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. படம் வித்தியாசமாக இருந்தால், யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறார்கள்.
“இந்தச் சமயத்தில் என்னுடைய ‘சொடக்கு’ படம் வருவது வசதியாக உள்ளது. இது திகில் படம். இந்த வகைப் படங்கள் எத்தனை வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால், ‘சொடக்கு’, தலைப்பைப் போன்றே வித்தியாசமாக இருக்கும்.
“உணவகத்தில் சாப்பிட்டாலும் வீட்டுச் சாப்பாடுதான் மனத்தை நிறைக்கும். எங்கள் படம் ஒரு வீட்டுச் சாப்பாடு போல குடும்பங்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் இருக்கும்.”
“திகில் பிரியர்களுக்கும் வணிக அம்சங்களில் நாட்டம் கொண்ட சினிமா ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி.
படம் மொத்தமும் மலேசியாவில் படமாவதற்குத் தயாரிப்பாளர்கள் முத்துக்குமார், தேவா அர்ஜுன், டத்தோ கணேசன் ஆறுமுகமும் உதவினார்களாம். ‘சினிமாவைப் படிக்க முடியாது. ஆனால் உணர முடியும்’ என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான குவின்டின் டாரன்டினோ கூறியதை நன்கு உணர்ந்துள்ளதால் தம்மால் தரமான படைப்பைத் தர முடியும,” என்றும் சொல்கிறார் காமராஜ்.
“ஒரு நல்ல திகில், வணிகப்படமாகக் கருதி ‘சொடக்கு’ படத்தைப் பார்க்க திரையரங்கு சென்றால் அது வீண்போகாது. உரிய அழகியல் மதிப்போடு இன்றைய இளையர்களைக் குறிவைத்து உழைப்பை விதைக்கிறோம். நிச்சயம் அறுவடை செய்வோம்,” என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.


