கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தார்.
அதன்பின்னர், மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான ‘தலைவி’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.
அண்மையில், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலை அறிவிப்பை மையமாகக் கொண்டு உருவான ‘எமர்ஜென்சி’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகிப் பரவலானது.
கங்கனா ரணாவத் ரகசியத் திருமணம் செய்துகொண்டார் போன்ற ஊகங்கள் வலுத்தன.
அவற்றிற்குப் பதிலளிக்கும் வகையில், இணையப் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், “படப்பிடிப்புத் தளத்தில் ஒப்பனையுடன் நான் இருந்தபோது எடுத்த புகைப்படம் இது. தற்போது இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகர்கள் தங்கள் கலைப் பயணத்தில் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டியுள்ளது. நான் ஒருபோதும் ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

