கங்கனா ரணாவத் பேச்சுக்கு சோனு சூட் கண்டனம்

கங்கனா ரணாவத் பேச்சுக்கு சோனு சூட் கண்டனம்

2 mins read
a0bc4856-4a90-4be3-b1a5-8f6f52cc1135
சோனு சூட், கங்கனா ரணாவத். - படங்கள்: இந்து தமிழ் திசை

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளையர்களைக் ‘கரப்பான்பூச்சிகள்’ என விமர்சித்த கங்கனா ரணாவத்திற்கு நடிகர் சோனு சூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்வில் இருப்போர் கவனமாக யோசித்துப் பேச வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஏனெனில், பொதுமக்கள் கடவுளின் இன்னொரு வடிவம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று சோனு சூட் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தற்போது திரையுலக வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

“பொதுவெளியில் பேசும்போது மற்றவர்களின் உழைப்பை மதித்துப் பேச வேண்டும், திரைத்துறையின் மேன்மையைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று சோனு சூட் கேட்டுக்கொண்டார்.

“இளையர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள்; நீங்கள் இந்த இடத்திற்கு வர உதவியாகவும் இருக்கிறார்கள்,” என்று சுட்டிக்காட்டிய சோனு சூட், “கங்கனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது,” என்றும் தெரிவித்தார்.

“எவ்வளவு காலம் இளையர்கள் உங்களுடன் நிற்கிறார்களோ, அந்த அளவுக்கு மட்டுமே உங்களால் ஒளிர முடியும்,” என்றும் சோனு சூட் கூறினார். “சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என ஒரு பழமொழி உண்டு,” என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

திரையுலகில் உள்ள நல்ல மனிதர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் இத்தகைய கருத்துகள் சிறுமைப்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

திரைத்துறையின் கண்ணியத்தைப் பாதுகாப்பது அனைத்துக் கலைஞர்களின் கூட்டுப் பொறுப்பு என்று சோனு சூட் மேலும் தெரிவித்தார்.

சோனு சூட்டின் இந்த உறுதியான கண்டனம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொறுப்பற்ற கருத்துகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதே சரியான அணுகுமுறை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இளையர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கங்கனாவின் கருத்துக்குத் திரைத்துறையிலும் சமூக ஊடகங்களிலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பொதுமக்களின் ஆதரவே கலைஞர்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்நடிகைகண்டனம்இளையர்