தமிழ்த் திரையுலகில் குழு நாட்டிய நடிகையாக இருந்த ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று அழைக்கப்பட்ட நடிகை பி. சரோஜாதேவி இம்மாதம் 14ஆம் தேதி மறைந்தார். கன்னடத்து பைங்கிளி என்றும் ‘அபிநய சரஸ்வதி’ என்றும் தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழுடன் வாழ்ந்த நடிகை மறைந்துவிட்டார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர், தனது நாடோடி மன்னன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து படத்தில் சரோஜாதேவி வரும் இரண்டாம் பாதியை வண்ணத்தில் எடுத்து அழகு பார்த்தார் .
அந்த ஜோடிப் பொருத்தம் மிகுந்த வரவேற்பைப் பெற சாண்டோ சின்னப்பா தேவரும் தான் தயாரிப்பாளராகி சமூகப் படங்கள் தயாரிக்கத் தொடங்கியதும் எம்ஜிஆர் - சரோஜாதேவி ஜோடியையே அதிகம் நாடினார்.
இந்த ஜோடியை வைத்து அவர் தாயரித்த தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனயன், நீதிக்குப் பின் பாசம் போன்ற படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. டிஆர் ராமண்ணா தனது ஆர்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜிஆர் வேலுமணியின் படகோட்டி போன்ற படங்களிலும் சரோஜாதேவி எம்ஜிஆருடன் சேர்ந்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதுபோல் எம்ஜிஆருடன் மொத்தம் 26 படங்களில் நடித்தார்.
அது மட்டுமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பெயர் வாங்கினார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த கல்யாணப் பரிசு படம் ஒரு காதல் காவியம். அதுபோல் சிவாஜியுடன் அவர் நடித்த பாகப் பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, இருவர் உள்ளம், புதிய பறவை போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை.
சிவாஜியுடன் அவர் நடித்த பாகப் பிரிவினை படத்தில் சோகமே உருவான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து...’ என்ற பாடல் அவருக்காகவே வடிக்கப்பட்டது போல் இருந்தது.
அதுபோல் இருவர் உள்ளம் படத்தில் சிவாஜியுடன், அவருடன் பேசாமலே இருக்கும் ஒரு மனைவி பாத்திரத்தில், நடித்து அசத்தினார். இப்படிப்பட்ட பாத்திரங்களில் நடித்தவர் அபிநய சரஸ்வதி என்ற பட்டத்தையும் பெற்றார்.
கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த அவர் தனது கீச்சுக் குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தன்மையால் கன்னடத்து பைங்கிளி என்ற அடைமொழியுடன் திரையுலகில் வலம் வந்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்தவருக்குத் திடீரென சரிவு ஏற்பட்டது. அதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
புகழின் உச்சத்தில் இருந்த நடிகையின் திரையுலக நடவடிக்கைகளை அவரது தாயார் கவனித்து வந்தார். ஒரு நாள் படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் தனது படத்திற்கு எம்ஜிஆரிடம் படப்பிடிப்பு நாள்களுக்கான தேதியை வாங்கிவிட்டு சரோஜாதேவியிடம் படப்பிடிப்பு நாள்களைக் கூறி அந்தத் தேதிகளில் படப்பிடிப்புக்கு வரக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், மகள் புகழின் உச்சத்தில் இருந்த மமதையில் அவர் தாயார் எங்களைக் கேட்டுவிட்டல்லவா தேதியை முடிவு செய்திருக்க வேண்டும் என்றார். அப்புறம் போகிற போக்கில் என் மகள் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்கிறார். கலர்ப் படத் தயாரிப்பாளர்கள் எல்லாம் அவருக்காக காத்திருக்க நீங்கள் கறுப்பு-வெள்ளைப் படம்தானே எடுக்கிறீர்கள் என ஒரு போடு போட்டார்.
இதைக் கேட்ட தேவர், கோபத்தின் உச்சிக்கே சென்றார். அங்கிருந்து நடையைக் கட்டுமுன் இனி என் படங்களில் உங்கள் மகள் நடிக்க மாட்டார் என்று கூறி தனது வேட்டைக்காரன் படத்திற்கு சாவித்திரியை நடிக்க வைத்து அதையும் வெற்றிப் படமாக்கிக் காட்டினார்.
அந்த சமயம்தான் ஜெயலலிதா திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவரது நடிப்பில் பிஆர் பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்த தேவர் தனது அடுத்தடுத்த எம்ஜிஆர் படங்களில் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியில் தொடர்ந்து கன்னித்தாய், முகராசி போன்ற வெற்றிப் படங்களைத் தந்தார்.
இதன் பிறகுதான் சரோஜாதேவியின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை படிப்படியாக மங்கத் தொடங்கியது. தனக்குத்தானே கெடுதல் விளைவித்துக்கொண்டோரின் வரிசையில் சரோஜாதேவியும் சேர்ந்தார் என்பதுதான் சோகம்.