ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு..

3 mins read
2e80bc91-f94b-4f9a-8b01-f0526ef8e748
மணி ஓசை படத்தில் - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன் எந்தச் சூழ்நிலைக்கும் பாடல் எழுதி நம்மை வியக்க வைத்தவர். காதல், பக்தி, தாலாட்டு, சோகம், தத்துவம் அறிவுரை என எப்படிப்பட்ட பாடல் வரிகளிலும் முத்திரை பதிப்பார், ஆழ்ந்து சிந்திக்க வைப்பார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் சிறுமியை அவ்வளவு அழகாக பாடல் வரிகளில் வருணித்தவர், மற்றொரு படத்தில் ஒரு சிறுமியைக் கொண்டே வயது வந்த, ஆனால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் ஒருவருக்கு அறிவுரை வழங்குகிறார்.

வயது வந்த ஒருவருக்கு சிறுமி அறிவுரை வழங்க முடியுமா, அதை ஏற்கும்படியாக இருக்குமா, சரியாக வருமா என்று யோசிப்பவர்கள் உண்டு. அங்குதான் கவிஞர் தமது திறமையை, தனித்தன்மையைக் காட்டுகிறார்.

அவருக்கு அறிவுரை கூறும் சிறுமி, அதை நேரடியாகச் செய்யவில்லை. ஓர் ஆட்டுக்குட்டிக்குச் சொல்வதைப் போல் படத்தின் கதாநாயகனுக்கு அறிவுரை வழங்குகிறார்.

1963ஆம் ஆண்டு வந்த படம் மணி ஓசை. அதில் கூன் விழுந்தவராகப் பிறக்கும் கல்யாண்குமாரை அவரது தந்தை கைவிட்டு விடுகிறார். அதனால் அவர் ஊராருக்கெல்லாம் சிறு வேலைகள் செய்து பிழைத்து வருகிறார். அவரை ஒருநாள் ஒருவர் திட்டிவிட அவரும் சோகம் தோய்ந்த முகத்துடன் இருக்கிறார். 

அப்பொழுதுதான் அவரைத் தேற்றி பழையபடி தன் பாதையில் வாழ்வதற்கு அந்தச் சிறுமி தனது கைகளில் ஆட்டுக்குட்டியை ஏந்தியபடி பாடுகிறார்.

“ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு அவர் ஆம்பிளையா பொம்பிளையா என்னான்னு கேளு மாட்டுவண்டி வச்சுக்கிட்டு வீட்டுக்குத் தண்ணிய ஊத்திகிட்டு மானத்தையும் காத்துக்கிட்டு மனுஷனாக வாழ்ந்துகிட்டு கிள்ளிவிட்ட பிள்ளைபோல அழுகிறாரு இவர் ஆம்பிளையா பொம்பிளையா என்னான்னு கேளு”

ஆம், ஊருக்கு உழைத்து, மானத்துடன் வாழும் ஒருவன் இப்படி அழலாமா என்று அந்த சிறுமி கேட்கிறாள். அந்தக் காட்சியில் நாயகனின் கன்னத்தையும் செல்லமாகத் தட்டிவிடுகிறாள்.

அடுத்து அவன் தேவையில்லாத ஒன்றுக்குக் கவலைப்படுவதாகவும் சில சமயங்களில் நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்றும் அந்தச் சிறுமி கூறுகிறாள்.

“ஆத்துல வெள்ளம் போனால் அந்தக் குருவிக்கு என்னடியோ இந்த நாட்டுல என்ன வந்தால் என்ன இவருக்கு என்னடியோ காட்டுல மேட்டுல காத்தடிச்சாக்க வீட்டுக்கு என்னடியோ எந்த காக்கா கத்தி பொழுது விடியும் எடுத்துச் சொல்லடியோ...”

ஆற்றில் வெள்ளம் ஓடினால் வானில் உயரப் பறக்கும் குருவிக்கு என்ன சேதம் வரப் போகிறது, அல்லது நாட்டில் நடக்கக்கூடிய எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்படத்தான் முடியுமா? அதேபோல் காட்டிலும், மேட்டிலும் காற்றடித்தால் வீட்டில் இருப்பவர் கவலைப்பட என்ன இருக்கிறது.

இவற்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதைத்தான் கவிஞர் கடைசியில் வரியில் மிக அழகாகச் சொல்கிறார்.

சேவல் கூவினால்தான் பொழுது விடிந்ததாக அர்த்தம். காக்கை கத்துவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று அந்தச் சிறுமி கூறுகிறாள்.

அடுத்து யார் எதைச் சொன்னாலும் கவலைப்படுவதை விடுத்து வாழ்க்கையை ழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவிஞர் தனது இயல்பான நம்பிக்கை தரும் சொற்களால் நமக்கு அறிவூட்டுகிறார்.

“கூடப் பிறந்த அக்கா தங்கச்சி கோபிக்கக்கூடாதா அந்தக் கோபப் பேச்சை அண்ணன் தங்கை கேட்டுக்கக்கூடாதா வீட்டுக்கு வீடு ஆயிரம் இருக்கு வெளியே வருதா மனதை விட்டுவிடாமல் காத்திருந்தால் காலம் வராதா ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு இவர் ஆம்பியைா பொம்பிளையா என்னான்னு   கேளு....”

ஆம், ஒருவர் கோபத்துடன் ஏதோ சொல்விவிட்டார் என்பதற்காக மனம் உடைந்துபோய் இருப்பது தேவையற்றது. எல்லார் வீட்டிலும் இதுபோல் ஆயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. அவை நமக்கு பெரும்பாலும் தெரியாமலே போய்விடுகின்றன. அதற்குபோய் மனம் வருத்தப்படுவது வீண் வேலை.

அது மட்டுமல்ல, அதை அப்படியே விட்டுவிட்டால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று எப்படி ‘அவள் ஒரு தொடர்கதை’ படப் பாடலில் ‘காலங்களாலே காரியம் பிறக்கும், காரியம் பிறந்தால், காரணம் விளங்கும்’, என்று அந்தப் படத்தின் நாயகி காலம் தான் செய்தது சரி என்பதைக் காட்டும் என்று கூறுகிறாளோ இங்கும் கவிஞர் காலம் நிலைமையைச் சரிசெய்துவிடும் என்று நம்பிக்கை தருகிறார்.

பாடலை சிறுமியின் குரலுக்கு ஏற்றவாறு எல் ஆர் ஈஸ்வரி எப்படிப் பாடுகிறார் என்பதை நீங்களும் கேட்டு இன்புறுங்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாபாடல்