மலேசியாவைச் சேர்ந்த கதிரவன் கதை எழுதி, இயக்கியுள்ள படம் ‘கண்நீரா’. இப்படத்தின் கதாநாயகனும் இவர்தான்.
மேலும் சாந்தினி கவுர், மாயா, நந்தகுமார் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். ஹரிமாறன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது முற்றிலும் வித்தியாசமான, அதேசமயம் யதார்த்தமான காதல் கதை என்கிறார் கதிரவன்.
“பொதுவாக காதல் படம் என்றால் கற்பனையும் கலந்திருக்கும். நம்மில் 90 விழுக்காட்டினர் நிச்சயமாக ஒரு முறையாவது வாழ்வில் காதலித்து இருப்பார்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அதைக் கடந்து வந்திருப்பார்கள்.
“காதலர்களுக்கு என்ன மாதிரியான அணுகுமுறைகள் தேவை, அது எந்த அளவுக்கு பயன்தரும் என்பதைக் கலை சார்ந்த படமாக அல்லாமல் வணிக அம்சங்களுடன் கூடிய ஜனரஞ்சகமான படமாக உருவாக்கியுள்ளோம்.
“படம் பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு காட்சியும் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். இது என் வாழ்வில் நடந்த சம்பவம். அது என் குடும்பத்தில் நடந்த விவகாரம் என்று ரசிகர்கள் நிச்சயம் பேசிக் கொள்வார்கள்.
“படம் பார்ப்பவர்களின் மனதைத் தொடக்கூடிய வகையில் உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகமாக இருக்கும்,” என்கிறார் கதிரவன். இப்படத்துக்கான படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலும் நடைபெற்று வருகிறது.
கதிரவனின் மனைவி கௌசல்யா நவரத்தினம்தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தாராம். ஆனால், படவேலைகள் தொடங்கியபோது அவர் தாய்மை அடைந்திருந்ததால் அது சாத்தியமாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அதனால் மனைவிக்குப் பதிலாக கதிரவனே படத்தை இயக்க வேண்டியிருந்தது.
“முதல் பாகத்தை எடுத்து முடித்திருந்த நிலையில் என் மனைவி இயக்குநர் ஆவதற்குத் தயாராகிவிட்டார். எனவே பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டேன். அவரும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை திறமையாக இயக்கியுள்ளார்.
“இரண்டு பாகங்களுமே வித்தியாசமான காதல் கதையுடன் உருவாகியுள்ளது,” என்கிறார் கதிரவன்.
அண்மைய சில ஆண்டுகளாக மலேசியாவில் உள்நாட்டுக் கலைஞர்களால் உருவாக்கப்படும் திரைப்படங்களைத் தமிழகத்தில் திரையிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் தற்போது ‘கண்நீரா’ படமும் இடம்பெற்றுள்ளது.