‘போர் தொழில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இப்போது தனது இரண்டாவது படத்திலேயே தனுஷை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
‘கர’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தகவல். தனுஷ் குறித்துப் பேசத் தொடங்கினால் விக்னேஷ் ராஜா முகத்தில் தனிப் பரவசத்தைக் காண முடிகிறது.
“தனுஷ் மீது பெரிய மரியாதை உண்டு. அவரை எப்படி வேண்டுமானாலும் செதுக்கிப் பார்க்கலாம். எல்லாருக்கும் அவரை வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதை எந்த இயக்குநரிடம் கேட்டாலும் சொல்வார்கள்.
“இந்தக் ‘கர’ படத்தை ஒரு வழக்கமான கதையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு சுவாரசியமான சினிமாவுக்கான பொறுப்பு இருப்பதை உணர்ந்து எடுத்த படம்.
“தனுஷ் போன்ற பெரிய நடிகரை வைத்துப் படம் இயக்க நிறைய உழைப்பும் புத்திசாலித்தனமும் வேண்டும். உணர்வுபூர்வமாகவும் கதை சொல்லியாக வேண்டும். எனக்கும் தனுஷுக்குமான பரிமாற்றங்கள் மகிழ்ச்சி அளித்தன,” என்று கூறியுள்ள இயக்குநர் விக்னேஷ் ராஜா, விகடன் ஊடகப் பேட்டியில் மேலும் பல சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
1991ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் நடக்கும் கதைதான் ‘கர’ கதை. இப்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் என்றால் அப்போது அமெரிக்காவும் ஈராக்கும் மோதிக்கொண்டன. எண்ணெய்க் கிடங்குகளில் வீசப்பட்ட குண்டுகளால் பல இடங்களில் தீப்பற்றி எரிந்து பெரும் சேதாரம் ஏற்பட்டது. அந்தச் சூழலில் 16 நாள்கள் நடக்கிற கதைதான் ‘கர’ திரைப்படம்.
இந்தக் கதையின் நாயகன் கரசாமி தன் வாழ்க்கையில் ‘இனி வேண்டவே வேண்டாம்’ என முடிவெடுத்து சில விஷயங்களை விட்டு விலகிச் செல்ல முற்படுகிறார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவற்றை மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறது.
தன்னை நம்பி இருந்தவர்களைக் கரை சேர்க்கப் பார்க்கிறான் கரசாமி. இதனால் அவன் சந்திக்கும் விளைவுகளையும் திருப்பங்களையும் சுவாரசியமாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.
தொடர்புடைய செய்திகள்
‘போர் தொழில்’ படத்தைப் பார்த்துவிட்டு தனுஷே இவரைத் தொடர்பு கொண்டு பேசினாராம். இருவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று தனுஷ் கூறிய உடனேயே, மனத்தில் இருந்த கதையை சில வரிகளில் கூறினாராம் விக்னேஷ்.
பிறகு, அதை விரிவான கதை, திரைக்கதையோடு விவரித்தபோது, தனுஷுக்குப் பிடித்துப்போனது. சில சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்துகொண்ட கையோடு கால்ஷீட் ஒதுக்கினாராம்.
“தனுஷை இயக்கப் போகிறோம் என நினைப்பு மனத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது உண்மைதான். அதிலும் எனக்கு இதுதான் இரண்டாவது படம். அவருக்கோ 54வது படம். மேலும் சிறந்த நடிகர், பெரும் அனுபவம் மிக்கவர். தேசிய விருது பெற்றவர் எனும் அவரது சிறப்புகளும் பதற்றத்தை அதிகரித்தன.
“ஆனால் நான் பயந்ததற்கு நேர்மாறாக மிக எளிமையான மனிதராகப் பழகினார். அவரை ஓர் இயக்குநர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கதைக்காக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்.
“இந்தப் படத்தில் எல்லா நடிகர்களையும் அவர்கள் இதுவரை செய்யாத கதாபாத்திரத்துக்குள் நுழைக்க விரும்பினேன். ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமாரை அப்படித்தான் பயன்படுத்தினேன். ‘அவர்கள் இப்படித்தான் செய்வார்கள்’ என ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் ரசிகர்கள் வைத்திருக்கும் கணிப்பை, அவர்கள் நினைப்பதிலிருந்து கொஞ்சம் தள்ளிக்கொண்டு போய் வைக்க நினைத்தேன்.
மமிதா பைஜு பெரும் இளையர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இதில் அவருக்கான கவர்ச்சி எதுவும் இல்லை எனத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். அவர் கதைக்களமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண்ணாகவே உருமாறி வந்தார். மிகவும் அர்ப்பணிப்பான நடிகை. இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கான அக்கறை கூடிய தத்தளிப்பில் ரசிகர்களைக் கலங்க வைத்துவிடுவார். இது புது மமிதா,” என்று கூறியுள்ளார் விக்னேஷ் ராஜா.

