தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அழகு சிகிச்சையைவிட உடற்பயிற்சியே சிறந்தது: கரீனா கபூர்

2 mins read
fa96db68-9758-4376-81ae-80aee26e8df3
கரீனா கபூர். - பட்ம்: ஊடகம்

இந்தித் திரையுலகில் தமது நடன அசைவுக்கும் நடிப்புக்கும் தமக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் கொண்டிருப்பர் கரீனா கபூர்.

2000ஆம் ஆண்டுத் தொடங்கிய அவரது திரையுலகப் பயணத்தில் பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்துள்ளார்.

நடிகர் சயிஃப் அலி கானைத் திருமணம் செய்துகொண்ட கரீனாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

44 வயதாகும் அவர், கடைசியாக நடித்த ‘க்ரூ’, ‘சிங்கம் அகெய்ன்’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், தமது ஊட்டச்சத்து நிபுணர் ருதுஜா திவாகரின் ‘தி காமன்சென்ஸ் டயட்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கரீனா, தமக்குச் சமைக்கவே தெரியாது எனக் கூறியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சுறுசுறுப்பான வேலை நாள்களுக்குப் பிறகு வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுபோல் சிறப்பானது எதுவுமே இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், “நானும் எனது கணவரும் சமைக்கக் கற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். அக்கலை எங்களது ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்றார் அவர்.

“சயிஃப் என்னைவிட சிறப்பாக சமைப்பார். எனக்கு முட்டையைக் கூட வேக வைக்கத் தெரியாது,” எனத் தமது சமையல் அனுபவத்தை அவர் பகிர்ந்தார்.

தமக்கு மிகவும் பிடித்தமான உணவு ‘கிச்சடி’ எனக் கூறிய அவர், மூன்று நாளைக்கு கிச்சடியை சாப்பிடவில்லை எனில் தனது மனம் மீண்டும் எப்போது அதை சாப்பிடப் போகிறோம் என ஏங்கத் தொடங்கிவிடும் என்றார்.

“நான் ஒரே உணவை 10-15 நாள்களுக்கு உண்ணவும் தயாராக இருப்பதால் எமது வீட்டுப் பணியாளர் கோபமடைகிறார். வாரத்தில் 5 நாள்களுக்கும் கிச்சடி சாப்பிடுவதென்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான். மிருதுவான அந்த உணவில் இருக்கும் நெய் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என தான் விரும்பி உண்ணும் உணவைக் கரீனா வர்ணித்தார்.

“எத்தனையோ பாரம்பரிய உணவுகள் இருந்தும் எனக்கு ஏன் கிச்சடியைப் பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த உணவு என் உடலுக்கு நல்லதா கெட்டதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த உணவு எனக்கு ஆறுதல் தருகிறது. அது என்னை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது,” என உணவுடன் தமக்குள்ள உறவு குறித்து மனம்திறந்து அவர் பேசினார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘பாயா சூப்’ மிகவும் பிடிக்கும் என வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் மீதான தமது அன்பை அவர் வெளிப்படுத்தினார்.

தமது உடற்பயிற்சி முறை குறித்தும் தமது இளமையின் ரகசியம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

சைவ உணவைப் பின்பற்றுவது தமது உடலையும் சருமத்தையும் எவ்வாறு மாற்றியது என்பது பற்றியும் ஆரோக்கியமான தமது வாழ்க்கை முறை குறித்தும் அவர் அந்நிகழ்ச்சியில் பேசினார்.

“அழகுசாதன சிகிச்சைகளைவிட உடற்பயிற்சி வலிமையானது. நடைப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறேன். அதனால் நான் இளமையாகத் தோற்றமளிக்கிறேன்,” எனத் தன் இளமையின் ரகசியத்தைப் போட்டுடைத்தார் கரீனா.

கரீனா கபூர்
கரீனா கபூர் - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்