தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில காட்சிகளை தங்களுடைய திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட பதிவில், ‘கர்மா சும்மா விடாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டும் வந்து சேரும்,” என நயன்தாரா சூசகமாகப் பதிவிட்டிருப்பதன் மூலம், அவர் மீண்டும் தனுஷைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா, தனுஷ் இடையே சட்ட ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் பிரச்சினைகள் நீடித்து வருவது திரையுலகத்தினர் மத்தியில் புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இருதரப்புக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து, பலர் கருத்து கூறி வருகின்றனர்.
தாம் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்புக் காட்சிகளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார் தனுஷ். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் இருவரும் இன்ஸ்டகிராமில் தனுஷை குற்றஞ்சாட்டி பதிவிட்டபோதும், இதுகுறித்து தனுஷ் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து நயன்தாராவின் சமூக ஊடகப் பதிவை தாம் பகிர்ந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் மலையாள நடிகை பார்வதி.
“தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என இன்று அறியப்படுபவர் மூன்று பக்க கடிதத்தை எழுதும் அவசியத்தை நினைத்துத்தான் நான் பகிர்ந்தேன். காரணமில்லாமல் நேர்காணல்கள் அவர் கொடுக்க மாட்டார் என்பது நமக்குத் தெரியும். அவர் அனுபவித்த வருத்தங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தேன்,” என்று பார்வதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

