ஜப்பானில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க சில ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி, ஜப்பானிய ரசிகர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் கார்த்தியின் தீவிர ரசிகர்கள் சிலர் ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளனர். சூட்டோடு சூடாக சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நான்கு முறை 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி, அந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்களுடன் ஜப்பானிய சூழல் குறித்து கலந்துரையாடி சில விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
"எனக்காக ஆசையுடன் வாங்கி வந்த பரிசுப் பொருள்களை அவர்கள் அளித்தபோது நெகிழ்ந்து போனேன்," என்கிறார் கார்த்தி.
ஜப்பானிய ரசிகர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர்களுடன் சேர்ந்து சில புகைப்படங்களை எடுத்துக்கொண்ட கார்த்தி, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவற்றைக் கண்ட உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ஜப்பானிய ரசிகர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிக்கு ஜப்பானில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது கார்த்திக்குக்கும் தீவிர ரசிகர்கள் இருப்பது திரையுலகத்தினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.