கார்த்தி தன்னை நாயகனாக நினைப்பதே இல்லை: நலன் குமாரசாமி

3 mins read
bf40d817-fb11-411d-945d-fca5554e06ef
கார்த்தி. - படம்: ஊடகம்

எம்ஜிஆர், சிவாஜி போன்ற சாதனையாளர்கள் மறைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

அத்தகைய தீவிர எம்ஜிஆர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ‘வா வாத்தியார்’ திரைப்படம்.

கதாநாயகனாக கார்த்தி நடிக்க, தெலுங்கில் அசத்திக் கொண்டிருக்கும் கிருத்தி ஷெட்டியை நாயகியாகக் களமிறக்கி உள்ளனர்.

கடந்த 1980களில் வெளிவந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘மசாலா’ படங்களைப் போன்ற ஒரு படத்தைத்தான் உருவாக்க நினைத்திருந்தாராம் இயக்குநர் நலன் குமாரசாமி. எனினும் படத்தை உருவாக்கும்போது, அது தனது பாணிக்கு மாறிவிட்டதாகச் சொல்கிறார்.

தீவிர எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் தனது பேரனுக்கும் எம்ஜிஆருக்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறார். காலம் செல்லச்செல்ல, ராமு என்ற அந்தப் பையன் கலகலப்பான காவல்துறை அதிகாரியாக வளர்ந்து ஆளாகிறான். ஆனால் கூடா நட்பு அவனை தவறான வழியில் செல்லத் தூண்டுகிறது. இதனால் நடக்கக்கூடாத விஷயங்கள் பல அரங்கேறுகின்றன. ஒரு கட்டத்தில் அவனது செயல்பாடுகள் பாசமான தாத்தாவின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிட, மனம் மாறும் ராமு எப்படி உருமாறுகிறான் என்பதுதான் ‘வா வாத்தியார்’ படத்தின் கதை.

“குழப்பம், நம்பிக்கை, வன்முறை ஆகிய பலவற்றுக்கு மத்தியில் ஒரு ரசிகன் தன் வாத்தியாரை தனக்குள்ளேயே சந்திக்கிறான். இதை பாடல், நடனம், உணர்வுபூர்வமான காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றைக் கலந்துகட்டிய மசாலாவாக மாற்றியுள்ளேன். ஆனால் படத்தைப் பார்த்த பலரும் இது எனது ஸ்டைலில் உருவான படம்போல் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதுவும்கூட வித்தியாசமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சில வேலைகள் உள்ளன. அதன்பிறகே திரைகாண படம் தயாராகும்,” என்கிறார் நலன் குமாரசாமி.

எதார்த்தமான படைப்புகள்தான் தமக்குப் பிடித்தமானவை என்று சொல்லும் இவருக்கு, தற்போது நடிகர் கார்த்தி போன்ற ஒருசிலர் மட்டுமே அப்படிப்பட்ட படைப்புகளில் நடிக்க ஆவலாக இருப்பதாகச் சொல்கிறார்.

உண்மையாகவே நல்ல படங்களில் நடிக்கும் கார்த்தி தன்னை கதாநாயகனாக நினைப்பதே இல்லை என்றும், ஒரு தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர் போன்றுதான் எதையும் அணுகுகிறார் என்றும் பாராட்டுகிறார்.

“கார்த்தி. விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பதால்தான் நல்ல திரைக்கதைகளை நல்ல பட்ஜெட்டில் யோசிக்க முடிகிறது. இல்லையென்றால் நல்ல கதையம்சம் உள்ள படம் என்றாலும் அது சிறிய படம், அல்லது புதுமுகங்கள் நடிக்கும் படம் என்றாகிவிடும். ஏன், இப்படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டிகூட கதையம்சம் உள்ள படங்களில் நடித்தபடியே, கவர்ச்சி வேடங்களிலும் நடிக்கிறார்,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் நலன் குமரசாமி குறிப்பிட்டுள்ளார்.

சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மொட்டைத் தலையுடன் (மொட்ட பாஸ்) திரையில் வில்லத்தனம் செய்யப்போகிறார் சத்யராஜ். கதையைக் கேட்ட உடனேயே, “சரி பாஸ். ஒரு கை பார்த்துவிடுவோம்,” என்று கூறினாராம்.

“ராஜ்கிரண் வேடத்துக்கு வேறு ஒருவரைத்தான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால், என் குழுவில் இருந்த மற்ற அனைவருமே ராஜ்கிரணைக் குறிப்பிட்டனர். அவரது நடிப்பைப் பார்த்த பிறகுதான் அனுபவத்துக்கு உள்ள மதிப்பு என்னவென்று இன்னும் தெளிவாகப் புரிந்தது.

“நன்றாக வடிவமைக்கப்பட்ட பாடல், நடனம், சண்டை எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. ஆனால் இவற்றை உள்ளடக்கிய ஒரு கதையை உருவாக்குவதே பெரும் சவாலாக ஆகிவிட்டது. அனுபவம் குறைவு என்றாலும் எப்படியோ சமாளித்துவிட்டேன். முதல் முயற்சியிலேயே இந்த அளவுக்கு வந்திருப்பது பெரிய விஷயம்,” என்றும் கூறியுள்ளார் நலன் குமாரசாமி.

‘வா வாத்யார்’ படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்