இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
அவர் 2019ஆம் ஆண்டு கார்த்தியை வைத்துக் கைதி திரைப்படத்தை இயக்கினார். அது மாபெரும் வெற்றிப்படமானது. அப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் இன்றும் திரையுலகில் பேசப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.
கைதி திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் குறித்தும், அதில் கார்த்தி எவ்வாறு முழு ஈடுபாட்டுடன் நடித்தார் என்றும் அப்படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு கூறியுள்ளனர்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தத் தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
“கைதி திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு மிகுந்த சவாலாக இருந்தது. குறிப்பாக, லாரியைக் கொண்டு சண்டைக் காட்சிகள் எடுப்பதற்குச் சிரமமாக இருந்தது. ஆனால், நடிகர் கார்த்தி அனைத்துச் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாகச் செய்தார்.
“கார் வைத்து எளிதாகச் செய்துவிட முடியும். ஆனால், லாரியை வைத்துப் படமாக்குவதால் ‘கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்’ பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், படத்தில் லாரியை ஓட்டத் தெரியுமா என்று கேட்டதும், நடிகர் கார்த்தி எப்படி சட்டென ஓட்டிக் காண்பித்தாரோ, அதையே தான் முதல் நாள் படப்பிடிப்பிலும் செய்தார்.
“கார்த்தி லாரி ஓட்டியதைப் பார்த்ததும், எங்களுக்கு இருந்த கவலைப் பாதியாகக் குறைந்தது. அந்த அளவிற்குச் சிறப்பாக லாரி ஓட்டினார். மேலும், அனைத்துக் காட்சிகளிலும் பயம் இல்லாமல் கார்த்தி நடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறக் கதவை, கார்த்தி தான் இழுத்து மூடுவார். இது போன்று அனைத்துக் காட்சிகளிலும் அவரே பயம் இல்லாமல் நடித்தார்” என அன்பறிவு தெரிவித்துள்ளனர்.
கைதி திரைப்படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்தார் லோகேஷ். இதன் தொடர்ச்சியாக ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற திரைப்படங்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன.
தற்போது ரஜினியை வைத்துக் கூலி படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது.
லோகேஷ் புகழாரம்
இந்நிலையில், இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டி, கருத்து தெரிவித்துள்ளார் லோகேஷ்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் ‘மண்டேலா’ படத்துக்காக அவர் தேசிய விருது வென்றுள்ளார்.
தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையில் தீவிரம் காட்டி வருகிறார். இப்படத்தினை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார்.
தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் மடோன் அஸ்வின் பணிபுரியும் விதம் குறித்து புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “2010-11 ஆண்டுவாக்கில், மடோன் அஸ்வின் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் எல்லாம் குறும்படம் என்றால் என்ன என்று கற்றுக் கொண்டிருக்கும்போது, அவன் குறும்படத்துக்குத் தேசிய விருது வாங்கினான். தேசிய விருது எப்படியிருக்கும் என்பதை அவனுடைய அறையில் தான் பார்த்தேன்.
“முதல் படம் இயக்கினால் தேசிய விருது படமாகத் தான் இருக்க வேண்டுமென விரும்பினான். 10 ஆண்டுகள் கழித்து ’மண்டேலா’ இயக்கினான். 2014-ம் ஆண்டு நான் முதல் படம் கையெழுத்திட்டபோது அவன் கதை எழுதிக்கொண்டிருந்தான்.
“நான் நான்காவது படம் இயக்கும் போதுதான் அவன் முதல் படம் வெளியானது. அஸ்வினாக என்றைக்காவது வெளியே வந்து படம் இயக்கினால் தான் உண்டு.
’மாவீரன்’ படத்தையே பொழுதுபோக்கு படமாக இயக்கிவிட்டோமா என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஆகையால் தான் அடுத்த படத்தை எடுக்க மேலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டிருப்பான் ” என்று தெரிவித்துள்ளார்.