உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தண்டேல்’. நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி எனத் தமிழ் பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, இப்படத்தின் நாயகியான சாய்பல்லவியைப் புகழ்ந்துள்ளார். கதாபாத்திரத்திற்குத் தன் நடிப்பால் உயிர்கொடுக்கும் திறமை சாய்பல்லவிக்கு உள்ளது எனக் கூறிய கார்த்தி, ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியுடைய தியாகமும் வலியும் எப்படி இருக்கும் என்பதை ‘அமரன்’ படத்தில் தனது நடிப்பால் திரைக்குக் கொண்டுவந்தவர் இவர், என்றார்.
இந்தியக் கடல்பகுதியில் மீன் பிடிப்பவர்கள் பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டு அங்கு அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘தண்டேல்’. இதில் ஓர் ஆழமான காதல் கதையையும் இயக்குநர் கட்டமைத்துள்ளார்.