நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகிறது `சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம்.
கடந்த 2022ல் வெளியானது ‘சர்தார்’ படத்தின் முதல் பாகம். தற்போது ‘சர்தார் 2’ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.
‘சர்தார் 2’ படத்தின் வெற்றி, கார்த்தியின் ரசிகர்கள் இடையே இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை சென்னையில் வெளியிட்டனர்.
கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கார்த்தி, ‘சர்தார் 2’ என்று தலைப்பு வைத்ததுமே இந்தப் படத்தின் மீது தமக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறினார்.
“இயக்குர் மித்ரன் அடுத்து என்ன சொல்லி பயமுறுத்தப் போகிறார் என்று எல்லாரும் கேட்கிறார்கள். முதல் படத்தில் (இரும்புத்திரை) கைப்பேசியில் வரும் தகவலைப் பார்த்தாலே பயமாக இருக்கும், அடுத்த படத்தில் (சர்தார் 1) தண்ணீர் போத்தலைக் கண்டு பயந்தோம்.
“அவற்றையெல்லாம் விட இந்தப் படத்தில் பயங்கரமான விஷயத்தை வைத்திருக்கிறார். உண்மையாகவே இந்தப் படத்தில் அச்சுறுத்தக் கூடிய பெரிய விஷயத்தைத் தொட்டிருக்கிறார்.
“வில்லன் எவ்வளவு பலமானவன், செல்வாக்கு கொண்டவன் என்பதை வைத்துத்தான் நாயகன் எவ்வளவு நல்லவன், துணிச்சலாக மோதக்கூடியவன் என்பதை சித்திரிக்க முடியும். சண்டை போடக்கூடிய இருவருமே மிகப்பெரிய ஆள்களாக இருந்தால்தான் போர் சுவாரசியமாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“அப்படி இந்தப் படம் மிகப்பெரிய போர் குறித்துப் பேசும். எனக்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா என்றதும் மிகவும் மகிழ்ந்தேன்.
“மித்ரனிடம் ஒரு பழக்கம் உண்டு. முக்கியமான சில காட்சிகளை ‘பிளாஷ்பேக்’ பகுதியாகத்தான் படமாக்குவார்.
“அவரது யோசனையில் உருவான படப்பிடிப்பு அரங்கைப் பார்த்து மிரண்டுவிட்டேன்,” என்றார் கார்த்தி.
இன்றைய சூழலில் படத் தயாரிப்பாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் இன்னொருவரின் சிந்தனையை, உழைப்பை நம்பி தயாரிப்பாளர்கள் ஆபத்து நிறைந்த சவாலை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அந்த அளவுக்கு இயக்குநர் மித்ரன் இந்தப் படத்துக்காக உழைத்திருப்பதாகக் குறிப்பிட்ட கார்த்தி, தாம் கையாளும் கதை அனைவருக்கும் புரிய வேண்டும், சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மித்ரன் நிறைய மெனக்கெட்டதாக தெரிவித்தார். தன்னுடன் திரையில் மோதும் எஸ்.ஜே.சூர்யாவையும் அவர் பாராட்ட மறக்கவில்லை.
“அவரது நடிப்புப் பசியை அளவிடவே முடியாது. எவ்வளவு நடிப்புத் தீனி கொடுத்தாலும் அவருக்குப் போதாது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரைக் கேட்டுக் கேட்டு அதை மெருகேற்றி நடிப்பதைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் வந்துவிடும்.
“எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் உடன் இருந்தால், யாருமே கைப்பேசியைத் தொட மாட்டோம். காரணம், அவரது ஒவ்வோர் அசைவிலும் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்.
“நானும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்சும் ‘கைதி’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளோம்,” என்றார் கார்த்தி.

