உறவுகளை மையமாகக் கொண்டு வெளிவர இருக்கும் படம் மெய்யழகன் என்று இசை வெளியீட்டு விழாவில் பேசினார் படத்தின் நாயகன் கார்த்தி.
‘96’ பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் கோவையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய கார்த்தி,” ‘சலங்கை ஒலி’, ‘வருஷம் பதினாறு’ போன்ற படமெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த மாதிரியான படங்கள் இப்போ வராதானு தோனியிருக்கு.
உறவுகள் நமக்கு மிகவும் அவசியம். அதைச் சொல்ற படமாக ‘மெய்யழகன்’ இருக்கும். ரொம்ப உருக்கமான அழகான கதை இது. ஒரே வாரத்துல இந்தக் கதையை பிரேம் குமார் எழுதியிருக்கார்.
பிரேம் மாதிரியான நண்பரை ‘96’ படத்தின் மூலம் எங்களுக்குக் கொடுத்ததுக்கு விஜய் சேதுபதிக்குத்தான் நன்றி சொல்லணும். அவர் இல்லை என்றால் இவர் வெளியே வந்திருக்கமாட்டார். அவர்தான் இவரை வெளியில் பிடித்து தள்ளிவிட்டார்.
என்னுடைய கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு கோவையில் நடக்கிற விழா இதுதான்னு நினைக்கிறேன். எனக்கும் இந்த ஊருக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கோ அந்த மாதிரியான ஒரு விஷயத்தைப் பேசுகிற படமா `மெய்யழகன்’ இருக்கும்.
என்னுடைய வேர்கள் இங்குதான் இருக்கின்றன. அதனால இந்த விழாவை இங்கு நடத்தினால் நல்லாருக்கும் என்று தோணியது!” எனக் கூறினார்.
கார்த்தியைத் தொடர்ந்து சூர்யா பேசுகையில், “மெய்யழகன் படத்தின் பெயருக்கு கீழ் ஜோதிகா, சூர்யா என்று எங்களுடைய பெயர் போடுவதற்கு வாய்ப்பு கொடுத்த பிரேம் குமாருக்கு நன்றி.
தொடர்புடைய செய்திகள்
2Dயோட முக்கியமான படமாக இது இருக்கும். படம் பார்த்து முடித்துவிட்டு கார்த்தியை வீட்ல போய் கட்டிப் பிடிச்சேன். படத்தைக் கண்டிப்பாக எல்லோரும் பாருங்கள். படத்தை படமாக பாருங்க. வணிக ரீதியாக பார்க்காதீர்கள். ரசிகர்களோட அன்புக்கு என்றைக்கும் நான் தலை வணங்குறேன்,” என்றார்.
படத்தின் இயக்குநர் பிரேம் குமார், “என்னுடைய முதல் இசை வெளியீட்டு விழா இது. கோவைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த ஊரில்தான் நான் கல்லூரியில் படித்தேன். என்னுடைய பேராசிரியர் ஒருவர்தான் என்னுடைய புகைப்படத்தை ஜூனியர் விகடனில் வர வைத்தார். அங்கு இருந்துதான் என்னுடைய பயணம் தொடங்கியது.
‘96’ படம் போலவே இந்தப் படமும் அன்பை பேசும். என்னை இயக்குநராக வெளிக்கொணர்ந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்,” எனப் பேசினார்.