மூட்டை கணக்கில் ‘சிப்ஸ்’ சாப்பிடும் கார்த்தி பொறுப்பான நடிகராக மாறிவிட்டார்: சூர்யா

மூட்டை கணக்கில் ‘சிப்ஸ்’ சாப்பிடும் கார்த்தி பொறுப்பான நடிகராக மாறிவிட்டார்: சூர்யா

2 mins read
எனக்கும் கார்த்திக்கும் இடையே போட்டியோ பொறாமையோ இருந்ததில்லை: சூர்யா
d3a89ec4-a2a7-4d87-84d9-4eac9e42ea32
‘சர்தார் 2’ திரைக்காட்சியில் கார்த்தி. - படம்: ரெட்டிட்
Google News Preferred Icon

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை, முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சூர்யா, தம்பி கார்த்தியின் அர்ப்பணிப்பு உணர்வை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

“எனக்கும் கார்த்திக்கும் இடையே போட்டியோ பொறாமையோ இருந்ததில்லை,” என்று வெளிப்படையாகத் தெரிவித்த சூர்யா, “என்னைவிடச் சினிமாவை ஆழமாக நேசிக்கக் கூடியவர் கார்த்தி,” என்றும் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய காலத்தில் கார்த்தி எளிமையாக இருந்ததை நினைவு கூர்ந்த சூர்யா, “அரிசி மூட்டை போல் இருக்கும் ‘சிப்ஸ்’ பாக்கெட்டை வாங்கி வைத்துச் சாப்பிட்டவர் கார்த்தி. அத்தகைய ஒருவர் இன்று பொறுப்புள்ள ஒரு நடிகராக மாறியுள்ளார். ‘பருத்திவீரன்’ படத்திற்காகத் தம்மை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு கடுமையாக உழைத்தார்.

“ஒரு நடிகனாக எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ, அதைச் செய்யக்கூடியவர் கார்த்தி,” என்று சூர்யா புகழாரம் சூட்டினார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

2022ல் வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக, அதிகப் பொருள்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.

பிரபல மூத்த நடிகர் சிவகுமாரின் பிள்ளைகளான இவ்விருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனித்தனி பாணியில் பயணித்துத் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாகத் திகழ்கின்றனர்.

நடனமில்லை; ஆனால் சண்டை உண்டு: மாளவிகா மோகனன்

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, “சர்தார் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையான முக்கியமான கருப்பொருளைப் படம் பேசும்,” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை மாளவிகா மோகனன், “சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. தமிழ்நாடும் மக்களும் எனக்கு எப்போதும் அளப்பரிய அன்பைக் கொடுத்துள்ளனர். உங்களுக்காக இப்படத்தில் அனைவரும் இணைந்து கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்.

“படத்தில் எனக்கு நடனம் எதுவும் இல்லை; ஆனால், சிறப்பான சண்டைக் காட்சிகள் உள்ளன. ஒரு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்சென்னைகார்த்தி