சென்னை: ‘கருப்பு’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலும் அதனுடன் தொடர்புடைய பாடலும் யார் மனத்தையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அப்படக் குழு கூறியுள்ளது.
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருப்பு’ படத்தில் உண்மைக்கு எதிராகப் போராடும் வழக்கறிஞர்கள் பலர் ஒன்றுகூடி போராட்டம் நடத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அக்காட்சியின் பின்னணியில் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற பாடலும் ஒலிக்கும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கானதாக அடையாளம் காணப்பட்ட அப்பாடலை தேவையற்ற இடத்தில் பயன்படுத்தி இருப்பது, இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான நிலைப்பாட்டை மறைமுகமாகக் கிண்டலடிப்பதுபோல் இருப்பதாகப் பலரும் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து கருப்பு படத்தின் தயாரிப்புத் தரப்பு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
“இளையராஜாவையோ, அவரது படைப்புகளையோ அல்லது அவரது உரிமைகளையோ எந்த வகையிலும் புண்படுத்துவதோ, அவமதிப்பதோ எங்களின் நோக்கம் அல்ல. அந்த வசனம் நகைச்சுவையின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டது.
“இளையராஜாவை நேரடியாகக் குறிப்பிடும் தனிப்பட்ட கருத்தாக அது உருவாக்கப்படவில்லை. எனவே அந்தக் குறிப்பிட்ட பகுதியை இனி வரும் பதிப்புகளில் நீக்க/மாற்ற முடிவு செய்துள்ளோம்”, என்று டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

