தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நயன்தாராவை பார்த்து நடிக்க வந்த காவ்யா அறிவுமணி

2 mins read
a262c393-dd38-4125-900d-a865da4655f3
‘நிறம் மாறும் உலகில்’ என்ற படத்தில் நடித்திருக்கும் காவ்யா அறிவுமணி. - படம்: ஊடகம்

‘நிறம் மாறும் உலகில்’ என்ற படத்தில் நடித்திருக்கும் காவ்யா அறிவுமணி, நகைக்கடை விளம்பரங்களில் நயன்தாரா இருப்பதைப்போல நாமும் மாறவேண்டும் என்று ஆசைப்பட்டு படங்களில் நடிக்க வந்ததாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிறம் மாறும் உலகில்’. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மல்லிகார்ஜுன் - மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை காவ்யா அறிவுமணி, “ஆம்பூர் எனும் ஊரிலிருந்து படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசுப் பேருந்தில் அந்தப் பெண் பயணம் செய்யும்போது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தைப் பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் இருந்தவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா.

“அந்த நகைக்கடை விளம்பரத்தைப் பார்த்த பிறகு, நாமும் ஏன் இதுபோன்ற விளம்பரங்களில் தோன்றக்கூடாது என அந்தப் பெண் நினைத்து, அதற்காக அவள் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள்.

“அதன் பிறகு குறும்படங்கள், விளம்பரப் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என நடித்து ரசிகர்களின் கவனத்தையும் அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.

“முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது.

“இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது ‘இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி அல்ல. ஆனால், இந்தப் படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும்,” என்று இயக்குநர் வாக்குறுதி அளித்தார்.

“அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து நடித்திருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம்பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை