தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை எனப் பலமுறை விளக்கம் அளித்த பின்னரும், அவற்றின் எண்ணிக்கை குறையவில்லை எனக் கவலைப்படுகிறார் இளம் நாயகி கயாது லோஹர்.
இவரது கவர்ச்சி, நடிப்பு, நடனம் ஆகியவை குறித்து வெளிவந்த செய்திகள் போதாது என்று, அண்மைய சில நாள்களாக பண முறைகேடு, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருடன் கயாது தொடர்பில் இருப்பதாகவும்கூட தகவல்கள் வெளியாகின்றன. இதனால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் கயாது.
“தமிழில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் கடைத் திறப்பு விழாவுக்குக்கூட என்னை அழைக்கிறார்கள். எனது சிறிய நடன அசைவுகளைக்கூட இணையத்தில் பல லட்சம் பேர் கண்டு ரசிக்கின்றனர்.
“ஆனால், திடீரென என்னைப் பற்றி மோசமான கிசுகிசுக்கள் வெளியாவது ஏன் எனத் தெரியவில்லை. என் திரை வாழ்க்கையை யாரோ சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள்,” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறார் கயாது லோஹர்.