விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே தமது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் ‘டிராகன்’ பட நாயகி கயாது லோகர்.
அண்மையில் தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் இயங்கி வரும் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கயாது.
அவருடன் சின்னத்திரை பிரபலமான கீர்த்தி, விஜய், பாடகர்கள் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா ஜெர்சன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது, ‘தமிழ் சினிமாவில் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்’ என்று கயாதுவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சிறிதும் யோசிக்காமல், ‘தளபதி விஜய்’ எனப் பதிலளித்தார் கயாது. மேலும், இது தமது நீண்ட நாள் ஆசை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சிம்புவின் அடுத்த படத்தில், இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, சிம்புவை சாதாரண நடிகராகக் கருதிவிடக் கூடாது என்றும் அவர் பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும் பதிலளித்தார் கயாது.
‘டிராகன்’ என்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலம், இணையத்தில் அதிகம் தேடப்படும் நாயகிகளில் ஒருவராக தானும் வளர்ந்திருப்பதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார் கயாது.
இவர் தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாகவும், தெலுங்கு பட இயக்குநர் அனுதீப்பின் ‘பங்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.