தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டியூட்’.
பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயாகியாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ரோகினி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
அப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப், “இயக்குநர் கீர்த்தியின் விடாமுயற்சி, நல்ல விஷயத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற அவருடைய எண்ணம் ஆகியவற்றுக்காகத் தான் ‘டியூட்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” எனக் கூறினார்.
மேலும், “‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை சொல்ல வரும் அனைத்து இயக்குநர்களிடமும் கதையைச் சுருக்கமாக மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லுவேன்.
“அதே போன்றுதான் ‘டியூட்’ படத்தின் கதையும் வந்தது. அதைப் படித்தேன், நன்றாகதான் இருந்தது. ஆனால், அந்நேரம் நான் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ போன்ற காதலை மையமாகக் கொண்ட படங்களில் நடித்திருந்தேன். அதனால் மீண்டும் காதல் படம் வேண்டாம் எனத் தோன்றியது,” எனப் பிரதீப் பேசினார்.
“என்னுடைய யோசனைகள் அனைத்தும் இவ்வாறு இருக்க, நான் செல்லும் அனைத்து இடங்களிலும் கீர்த்தி பற்றிய பேச்சு வந்தது. அதனால், அவரை அழைத்துப் பேசினேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் கதை செல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் மீண்டும் காதல் படத்தில் தற்போது நடிக்க விருப்பம் இல்லை,” என இயக்குநர் கீர்த்தியிடம் அவர் சொன்னதாகப் பிரதீப் தெரிவித்தார்.
ஆனால் ஒரு மாதம் இந்தக் கதை தனக்குள் ஓடிக்கொண்டே இருந்ததாகவும் கனவில் கூட அது வந்ததாகவும் அவர் சொன்னார்.
கீர்த்தி வேறு நடிகரை அணுகி அக்கதையில் நடிக்க சம்மதம் வாங்கிவிட்டதாகவும் இருந்தாலும் தான் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் எண்ணுவதாகவும் தகவல் கிடைத்ததாகப் பிரதீப் கூறினார்.
“உடனே, கீர்த்தியை அணுகி கதைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டேன். அவரைப் பார்க்கும்போது ‘கோமாளி’ படம் எடுத்தபோது நான் எப்படி இருந்தேனோ அப்படியே அவர் இருப்பதுபோல தோன்றியது,” என்றார் பிரதீப்.