தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானதும் கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் என்றாலே ‘மகாநதி’ தான் நினைவுக்கு வரும். அந்தப் படத்தில் சாவித்திரியாக அவர் திரையில் செய்த மாயாஜாலம் அப்படிப்பட்டது. இந்த தலைமுறையினருக்கு சாவித்திரி என்றாலே கீர்த்தி சுரேஷ்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு தனது நடிப்பால் மயக்கிய கீர்த்தி சுரேஷுக்கு அந்தப் படத்திற்குப் பிறகு சரியான வெற்றி கிடைக்கவில்லை.
நாயகியை மையப்படுத்தி அவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படமும் படுதோல்வி அடைந்தது. அதனால் தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அங்கு தனது மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தோற்றத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடிக்கிறார். வருண் தவான் இதில் நாயகனாக நடிக்க, கலீஸ் இப்படத்தை இயக்குகிறார். அதிரடி மர்மப் படமாக உருவாகும் இந்தப் படம், விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மறுபதிப்பு ஆகும். ஆனால், பாலிவுட் பாணியில் மாற்றங்கள் செய்துள்ளனர்.
இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தியில் கதாநாயகிகள் கவர்ச்சி காட்டுவது வழக்கம். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் விஷயத்திலும் அது நடந்துள்ளது.
இந்தப் படத்திலிருந்து ‘நைனா மட்டக்கா’ என்ற பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதற்குக் காரணம் கீர்த்தி சுரேஷின் தோற்றம்தான். ஏனெனில் அவர் இதில் தோன்றும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு கீர்த்தி கவர்ச்சியாகத் தோன்றியுள்ளார்.
இத்தனை நாள்கள் தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்த படங்களில் தான் ஒரு குடும்பப் பெண் என்ற பிம்பத்தை உருவாக்கினார். ஆனால், பாலிவுட்டுக்குச் சென்றதும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இப்படி கவர்ச்சிக்குத் தாவிவிட்டாரே என அவரது புகைப்படங்கள், காணொளிகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.