கீர்த்தி சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, இம்மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தை விளம்பரப்படுத்தினார்.
பிக்பாஸ் தமிழ் 9வது தொடர் விறுவிறுப்பாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க விஜய் சேதுபதி, “சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இங்கு வந்து இருக்கிறீர்கள். உங்கள் வேலையைச் சரிவர செய்யாமல் இருக்கிறீர்கள்,” என்று காட்டமாகப் போட்டியாளர்களைக் கடிந்துகொண்டார்.
வாராவாரம் அவர் போட்டியாளர்களைக் கடிந்துகொண்டாலும் யாரும் காதில் வாங்கிக்கொள்வதாகத் தெரியவில்லை.
சுமாராக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க அவ்வப்போது திரைப் பிரபலங்கள் தாங்கள் நடித்திருக்கும் படங்களை விளம்பரப்படுத்த வீட்டிற்குள் வந்துசெல்கின்றனர்.
கடந்த வாரம் நடிகர் கவின் தனது ‘மாஸ்க்’ படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 25) பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ரசிகர்களையும் போட்டியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இம்மாதம் அவர் நடித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தைப் பற்றி விளக்கமளித்து, படத்தின் முன்னோட்டக் காட்சியையும் வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஜெகதீஷ் தயாரிப்பில் தாம் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் நகைச்சுவைப் படமாக உருவாகி இருக்கிறது என்றும் இந்தப் படம் 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றும் படத்தின் கதையை வெளிப்படையாகக் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு அவர் வெளியேறினார்.
‘ரிவால்வர் ரீட்டா’ படத்தை ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு எழுதி, இயக்கியுள்ளார்.
இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் இப்படத்தின் பெயர், முன்னோட்டக்காட்சி ஆகியவை வெளியாகி, படம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.
ஆறு மாதங்களாக படமே இல்லாமல் வீட்டில் இருந்தது பற்றியும் ஒரு நேர்காணலில் கீர்த்தி பகிர்ந்துகொண்டார்.
“‘மகாநதி’ படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது.
“அந்தப் பாத்திரத்தைப் பார்த்த இயக்குநர்கள், மற்ற பாத்திரங்களில் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகத்தில் இருந்தனர்.
“அதனால் வணிக ரீதியான திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்கள் என்னை நாடவில்லை.
“ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும், ஆறு மாதங்களுக்கு எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எனக்கு என்மீது நம்பிக்கை இருந்தது. அதை நேர்மறையாகப் பார்க்க ஆரம்பித்தேன்.
“அப்போது கிடைத்த எல்லாக் கதைகளையும் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு நல்ல கதைக்காகக் காத்திருக்க முடிவுசெய்தேன்,” என்று அவர் கூறினார்.
கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ரகு தாத்தா’ படம் சரியாக ஓடவில்லை.
அதனால், ‘ரிவால்வர் ரீட்டா’வின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘ரிவால்வர் ரீட்டா’, கீர்த்தியை மீண்டும் கரைசேர்க்குமா என்பது சில நாள்களில் தெரிந்துவிடும்.

