தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குண்டர்களிடம் மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ் குடும்பம்

2 mins read
c9a7ec93-7cd2-400b-ba00-1c55d1b0f589
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

தேசிய விருது பெற்ற நடிகை என்றாலும், ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக, புதுமுக நடிகையைப் போல் கடுமையாக உழைக்கிறார் என்று கீர்த்தி சுரேஷைப் பாராட்டுகிறார் இயக்குநர் கே.சந்துரு.

‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கியுள்ள இவரது அடுத்த படமாக உருவாகிறது ‘ரிவால்வர் ரீட்டா’. இதில் கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகி. படம் விரைவில் திரைகாண உள்ளது.

இரண்டு மோசமான குண்டர் கும்பலிடம் ஒரு குடும்பம் சிக்கிக்கொள்கிறது. அக்குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. பெண்கள் மட்டுமே உள்ள அக்குடும்பம், குண்டர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறது என்பதுதான் கதையாம்.

“கீர்த்தி சுரேஷ் அற்புதமான திரைக்கலைஞர். இயக்குநர் எதிர்பார்ப்பதை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“இப்படத்தின் கதையை அவரிடம் விவரித்தபோது, எவ்வாறு சிரித்தபடியே கேட்டாரோ, படப்பிடிப்பு முழுவதும் அப்படியேதான் சிரித்த முகத்துடன் காணப்பட்டார்.

“ஓர் உண்மையைச் சொல்கிறேன். இயக்குநர் ஆவதற்கான அனைத்துவித திறமையும் தகுதியும் கொண்டவர் கீர்த்தி சுரேஷ்,” என்ற பெரிய பாராட்டு மடலையே வாசிக்கிறார் இயக்குநர் சந்துரு.

இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், அந்த அளவிலேயே சுருக்கிவிட முடியாது என்றும் கூறுகிறார்.

ஒரு வணிகப் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் இதில் பார்க்க முடியுமாம்.

“ஒரு தாயும் மூன்று மகள்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென ஒரு நாள் நான்கு பேரும் குண்டர்களிடம் சிக்க நேரும்போது, அந்தக் குடும்பத்தில் உள்ள புத்திசாலிப் பெண்ணான கீர்த்தி, குடும்பத்தைக் காப்பாற்ற எவ்வாறு போராடுகிறார் என்பதை சுவாரசியமாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

“24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படம். சில தருணங்களில், நமக்குள் பழிவாங்கும் உணர்வு ஏற்படும். நம்மில் சிலர் உண்மையாகவே பழிவாங்கிவிடுவோம். சிலர் ஏதும் செய்யாமல் ‘அனைத்தையும் கர்மா பார்த்துக்கொள்ளும்’ என்று விட்டுவிடுவார்கள். இந்தப் படத்தின் கதாபாத்திரங்களையும்கூட அப்படிப்பட்ட கர்மாதான் ஆட்டிப்படைக்கிறது எனலாம்.

“கீர்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமல்லாமல், படம் முழுவதுமே நகைச்சுவை, அடிதடி, உணர்வுபூர்வமான காட்சிகள் என அனைத்தும் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் சந்துரு.

ராதிகா சரத்குமார், சுனில், ‘விசாரணை’ அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய், சென்றாயன் என ஏராளமான கதாபாத்திரங்களில் கதைக்கானவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனராம்.

தெலுங்கு நடிகர் சுனில்தான் முதன்மை வில்லன்.

“ஒரு கதைக்குப் பலம் சேர்ப்பது கதாபாத்திரங்கள்தான். அவற்றின் தன்மை புதிதாக, வித்தியாசமாக அமைந்தால் சிறப்பாக இருக்கும். ராதிகா அப்படிப்பட்ட நடிப்பை வழங்கக்கூடியவர். வழக்கம்போல் இந்தப் படத்திலும் துல்லியமான நடிப்பால் தனது கதாபாத்திரத்தை பார்ப்பவர்களின் மனத்தில் நிலைநிறுத்தும்படி அருமையாக நடித்துள்ளார்.

“நடிகர் சுனில் பார்ப்பதற்குத்தான் கரடுமுரடாக இருப்பார். ஆனால் பழகுவதற்கு இனிமையானவர். தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகி, வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அசத்தியுள்ளார். அவருடைய அனுபவம் இந்தப் படத்துக்கு பெரும்பலமாக இருக்கிறது.

“ஷான் ரோல்டன் இசை, தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு ஆகியவை இப்படத்தின் மற்ற சிறப்பம்சங்கள்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் இயக்குநர் சந்துரு.

குறிப்புச் சொற்கள்