ஒருவரிடம் உள்ள குறையே அவரது நிறையாக (தனித்துவமாக) மாறும் அதிசயம் திரையுலகில் மட்டுமே சாத்தியம்.
சரத் வாழ்க்கையில் இதுதான் நடந்திருக்கிறது.
‘லப்பர் பந்து’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் இவரைப் பார்த்திருக்க முடியும்.
அண்மையில் வெளியான ‘யூத்’ படம் இவருக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதில் ‘பப்லு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத்.
கதைப்படி, பள்ளிக்கூடக் காட்சிகளில் நாயகன் கென்னுடன் சரத்தும் இருப்பார்.
“எனக்குத் தொண்டையில் சில பிரச்சினைகள் உள்ளன. அதனால் நான் பேசினால் தெளிவாக இருக்காது. ஆனால், நடிப்புத் தேர்வுக்காகச் செல்லும் இடங்களில், உச்சரிப்பு சரியாக இல்லை எனச் சொல்லி அனுப்பிவிடுவார்கள். இதை நினைத்துப் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
“ஆனால், மற்ற அனைவரும் குறையாகப் பார்த்த இந்த விஷயத்தை கென் நேர்மறையாகப் பார்த்தார். ‘லப்பர் பந்து’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பதைப் பார்த்து நடிகர் கருணாஸ், தன் மகன் கென்னிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பிறகு திடீரென ஒரு நாள் இரவு 11 மணியளவில் கென் என்னைத் தொடர்புகொண்டு பேசினார்,” என்று நடந்ததை விவரிக்கிறார் சரத்.
‘யூத்’ படத்தில் இவரை மனத்தில் வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறினாராம் கென். மேலும், சரத்துக்கு ஒரு சண்டைக் காட்சியும் இருப்பதாகத் தெரிவித்தாராம்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இரவு 11 மணிக்கு வந்த அழைப்பு என்பதால் சரத் தன்னை அழைத்தது கென் என நம்பவில்லை.
உண்மை தெரிந்த பிறகு, இவரே மீண்டும் கென்னை அழைத்துப் பேச, ‘யூத்’ குழுவில் சரத்துக்கும் இடம் கிடைத்திருக்கிறது.
அது மட்டுமல்ல, அந்தப் படத்தில் சரத்தை இணைத்துக்கொள்ள முக்கியமான காரணம் அவரது குரல்தான் என்றும் கூறியுள்ளார் கென்.
“அதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கென்னை என்னால் மறக்க இயலாது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் சரத், நடிகர் சிவகார்த்திகேயனின் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர்.
சிவாவை ‘அண்ணா’ என்றுதான் பாசத்துடன் குறிப்பிடுகிறார். எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது அவர்தான் ‘டான்’ படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
பிறகு, ‘கனா’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்துவுடன் அறிமுகம் கிடைக்க, பின்னாள்களில் அவரது ‘லப்பர் பந்து’ படத்தில் சரத்துக்கு அவர் வாய்ப்பு அளித்துள்ளார்.
‘டான்’ படத்தில் நடிப்பதற்கு முன்னால், நடிப்பில் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்று குறிப்பிடும் சரத், இப்போது நடிப்புத் துறைதான் எதிர்காலம் என்று முடிவெடுத்து, வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்.
“இப்போதும்கூட நான் சிவா அலுவலகத்தில்தான் தங்கியிருக்கிறேன். வெளியே சென்றால் வாடகை, உணவு என்று அதிகம் செலவாகும் என்பதால் இங்கேயே தங்கிவிடு என்று கூறிவிட்டார். ‘யூத் படம் வெளியானதும் இனி உனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்’ என்று கூறி சிவா வாழ்த்தினார். அவருக்கும் என்றைக்கும் நன்றி சொல்வேன்,” என்கிறார் சரத்.

