‘லிஃப்ட்’, ‘டாடா’ என்று ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் தனது வளர்ச்சியை சத்தமில்லாமல் கோடம்பாக்கத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகர் கவின்.
தனது இயல்பான நடிப்பும் படத்தேர்வும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘கிஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளாராம்.
நடன இயக்குநர் சதீஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.
முன்பே அறிவித்தபடி படத்தை செப்டம்பர் 19ஆம் தேதி திரையிட உள்ளனர்.
‘அயோத்தி’ படப் புகழ் பிரீத்தி அஸ்ரானி, வி.ஜே.விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், இப்படக்குழு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தது.
நடிகை பிரீத்தி பேசும்போது, தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
படப்பிடிப்பு தொடங்கியது முதல் மொத்த படப் பணிகளும் முடியும் வரை, மிக இன்பமான, உற்சாகமான அனுபவங்கள் கிடைத்ததாகத் தெரிவித்த பிரீத்தி, தனது கதாபாத்திரத்தை மிக வலுவான ஒன்றாக இயக்குநர் சதீஷ் அமைத்திருந்ததாகக் கூறினார்.
“கிட்டத்தட்ட அவருடைய கதாபாத்திரம் பெண்ணாக இருந்திருந்தால், என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் அப்படித்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளேன்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என நம்பு[Ϟ]கிறேன்,” என்று தமிழில் பேசி முடித்தார் பிரீத்தி.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினும் கவினும் இணையும் மூன்றாவது படமாம் இது. இத்தகவலை அவரே குறிப்பிட்டார்.
“இது ஓர் உற்சாகமான படக்குழு. என்னை நம்பிய இயக்குநர் சதீஷுக்கும் கவினுக்கும் நன்றி. இருவரது ஆதரவால்தான் ஏழு பாடல்களை உருவாக்க முடிந்தது,” என்றார் ஜென்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலைப் பாடியுள்ளாராம். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.
இறுதியாகப் பேசிய படத்தின் நாயகன் கவின், ‘கிஸ்’ படம் தமக்கு ஆறாவது படம் என்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் விஷாலுக்கு முதலில் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“இந்தப் படம் பேசப்பட்டு, இரண்டு ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. ஆனாலும், இதன் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்தவர் விஷால். அதேபோல், கடந்த சில நாள்களாக, ஓரிரு மணி நேரம் மட்டுமே தூங்கி, இந்தப் படத்துக்காக உழைத்த தொழில்நுட்பக் குழுவுக்கும் நன்றி.
“படத்தில் விஜய் சேதுபதியின் குரலைக் கேட்க முடியும். இதற்காக பத்து நிமிடங்கள் ஒலிப்பதிவுக் கூடத்துக்கும்கூட வந்துபோனார். இவையெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நிகழ்வுகள். எங்களுக்குச் சாத்தியமானவை.
“என்னுடைய முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு தொகுப்பாளராக வந்திருந்தார் மிர்ச்சி விஜய். இன்று அவரும் ஒரு நடிகர். அவரை நான்தான் தொகுப்பாளராக இல்லாமல், இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக வர வேண்டும் எனச் சொல்லியிருந்தேன்.
“எங்களுடன் இணைந்ததற்காக நாயகி பிரீத்திக்கு நன்றி. அவர் இந்தப் படத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத கோணத்தில் வந்துபோவார். அவரது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
“பிரபு, தேவயானி எனப் பலரும் எங்களுடன் நடித்துள்ளனர். இவர்களைப் போன்ற திறமைவாய்ந்த, மூத்தவர்களுடன் நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
“இசையமைப்பாளர் ஜென்னுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். சினிமாவில் உழைப்புக்கான மரியாதை உடனே கிடைத்துவிடாது. தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்போம். இந்தப் படத்துக்காக ஜென் கொடுத்துள்ள உழைப்பு மிகப் பெரியது.
“படத்தின் தலைப்பைக் கேட்டதும் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், உண்மையிலேயே இது அனைவரும் குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து பார்க்கக்கூடிய படைப்பு என்பதுதான் உண்மை,” என்கிறார் கவின்.

