ஹாலிவுட் திரையுலகத்தை நமது தமிழ் மொழியில், கோலிவுட் மக்களுக்கும் கொடுக்கவேண்டும் எனும் ஆசைக்கான உழைப்புடன் ‘கங்குவா’ படம் தயாராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘கங்குவா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் சிவா பேசியபோது, “இந்தியாவே எதிர்பார்க்கும் திரைப்படம், பலகோடி ரூபாய் பட்ஜெட், இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா, ரூபாய் ஆயிரம் கோடி வசூல் எனும் எதிர்பார்ப்புடன் களமிறங்க உள்ளது ‘கங்குவா’ படம்.
“சூர்யாவின் அர்ப்பணிப்பை வெறும் வார்த்தைகளில் எளிதாகச் சொல்லிவிட முடியாது. அந்தளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளார்.
“கங்குவா பாத்திரத்திற்காக அவர் தயாராகி நிற்கும்போதெல்லாம், ‘கிடைச்சுட்டாருடா என் கங்குவா’ என்றுதான் நான் மெய்சிலிர்த்துப் போனேன். இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் தானும் ஒருவர்,” என்பதை சூர்யா சொல்லாமல் நிரூபித்துக்கொண்டு இருந்தார்.
“கங்குவா’ படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுத்துள்ளோம். இந்தக் காலகட்டத்தில் சூர்யா என்ற மனிதரிடம் பழக அற்புதமான வாய்ப்பை கடவுள் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
“படத்திற்கு 100% உழைப்பைக் கொடுத்து வெற்றிபெறச் செய்துவிடலாம் என குறைந்தது 100 முறையாவது சொல்லியிருப்பார் சூர்யா.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், அவரை நான் நிறையவே சிரமப்படுத்தி விட்டேன். ஏழு நாள்கள் தண்ணீருக்குள்ளேயே தங்கவைத்து காட்சிகளை எடுத்துள்ளோம்.
“என்னுடைய அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு இந்தத் திரைப்படம் மக்கள் மனதில் நீங்காமல் நிழலாடும்,” என்று உறுதியாக நம்புவதாகச் சொல்லும் இயக்குநர் சிவா, மக்களுக்குப் பிடித்தது போல் படம் எடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அந்தத் திறனைக் கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார் என்கிறார்.
“ஆனால், இதுபோன்ற ஆசை என் மனதில் முதன்முதலாக துளிர்விட்டபோது எனக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் எனது நண்பரும் வழிகாட்டியும் வரமாகவும் அமைந்தவர் ‘தல’ அஜித் குமார்தான்.
“அஜித் என்மேல் வைத்த நம்பிக்கைதான் இந்தளவுக்கு எனக்குப் பலத்தைக் கொடுத்து என்னை உயர்த்திப் பிடித்துள்ளது,” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார் இயக்குநர் சிவா.
இரண்டு தோற்றங்களில் சூர்யா
ஒரு சூர்யாவின் பெயர் ‘கங்குவா’, மற்றொரு சூர்யாவின் பெயர் ‘ஃபிரான்சிஸ் தியோடோர்’.
கங்குவா பாத்திரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடப்பது. கிட்டத்தட்ட நெருப்பு மாதிரி ஒரு பாத்திரம். அவன் ஒரு காட்டாறு.
ஃபிரான்சிஸ் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர். காசுக்காக எதையும் செய்யும் ஒரு பாத்திரம்.
இவ்விரு பாத்திரங்களுக்கு இடையில் ‘உதிரன்’ என்கிற அரக்கத்தனமான ஒரு தலைவன்.
இந்த மூன்று பாத்திரங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை மையப்படுத்தி கதை நகரும் என்கிறார் இயக்குநர் சிவா.
தாய்லாந்து ஷாவ்ங்மே காட்டைத் தேர்ந்தெடுத்தோம். இதுவரையிலும் தாய்லாந்தின் அடர் காடுகளை அதிகம் படத்தில் காட்டி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ஈட்டிகள், வேல் கம்பு, 500க்கும் மேலான மாஸ்க்குகள், கவசங்களுடன் நிறைய சவாலான உழைப்பைக் கொடுத்துள்ளோம்.
முந்தைய படங்களில் குடும்பக் காட்சிகள் உணர்வுபூர்வமாக இருக்கும். இந்தப் படத்தில் மனிதம் என்கிற உணர்வுதான் கதைக்கரு. நிறைய உழைப்பைக் கொடுத்துள்ளோம்.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு கூடிய சீக்கிரம் அடுத்த பாகத்தை ஆரம்பித்துவிடுவோம். இன்னும் பிரம்மாண்டமான 2ஆம் பாகத்தையும் எதிர்பார்க்கலாம் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.