தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோடம்பாக்கச் செய்திகள்

4 mins read
f4c4d3a4-8433-4df7-bc02-55a89ef65afc
தமன்னா. - படம்: ஊடகம்
multi-img1 of 10

கவிஞர் குடும்பத்துக்கு நிதி திரட்ட நிகழ்ச்சி

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்தார் இன்றும்கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இதையறிந்த இயக்குநர் ஏ.எல்.விஜய், அந்தக் குடும்பத்துக்கு உதவும் விதமாக நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளார். நா.முத்துக்குமாரின் பிறந்த மாதமான ஜூலையில் சென்னையில் பிரம்மாண்ட விழா நடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை முத்துக்குமார் மனைவியிடம் வழங்க இருக்கிறது ஏ.எல்.விஜய்யின் குழு. இதில் அவருடன் லிங்குசாமி, ராம், அஜயன்பாலா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு, ‘ஆனந்த யாழை...’ என்று பெயரிட்டுள்ளனர்.

இது வாரிசுகளின் காலம்

இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் பணிபுரிந்து வருகிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் மகன் ஆதி, ‘தக் லைஃப்’ படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். இயக்குநர் சுதா கொங்கராவின் மகள் உத்ரா தயாரிப்பில் உதவியாக இருக்கிறார். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் சனாவும் மணிரத்னத்திடம்தான் பணியாற்றுகிறாராம்.

வில்லன்களாக விரும்பும் நாயகர்கள்

கதாநாயகர்கள் வில்லன் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தும் காலம் இது. ரவி மோகன், அருண் விஜய் வரிசையில் நடிகர் ஆர்யாவும் வில்லன் பட்டியலில் இணைந்துள்ளார். பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் ஆர்யா கொடூர வில்லனாக நடிக்கிறார். இதில் சோபிதா துலிபாலா முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். ‘சார்பட்டா பரம்பரை’யில் துஷாரா பேசப்பட்டது போல, ‘வேட்டுவம்’ மூலம் சோபிதா ஜொலிப்பார் என்கிறார்கள்.

விக்ரமுடன் இணையும் ‘மார்க்கோ’ இயக்குநர்

குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார் விக்ரம். ‘வீர தீர சூரன்’ படம் வசூல் ரீதியில் ஓரளவு சாதித்துள்ளதாகத் தகவல். நாடு திரும்பிய பின், அவரது புதுப்பட அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். ‘மார்க்கோ’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, அதன் இயக்குநர் உன்னி முகுந்தன் அடிக்கடி சீயான் விக்ரமுடன் காணப்பட்டார். இருவரும் இணைந்து படம் செய்யும் எண்ணத்தில் தீவிரமாக இருப்பதாகத் தகவல்.

கவர்ச்சித் தீண்டாமை

“எனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்கள் கவரப்பட்டாலும்கூட, பலர் என்னை அலட்சியமாகவே பார்க்கிறார்கள். எனது கவர்ச்சி தீண்டத்தகாததாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல. எனது புகழைக் கெடுக்கும் விதமாக, ‘சிலர்’ பணம் கொடுத்து, சமூக ஊடகத்தில் செயற்பாட்டாளர்கள் மூலம் என்னை மோசமாக விமர்சிக்கிறார்கள்.” - இப்படி கான் விழாவில் தன் உள்ளக்குமுறலைக் கொட்டியிருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுதெலா. இவர் இந்தி தொலைக்காட்சித் தொடரில் பாம்புப் பெண்ணாக நடித்து புகழ்பெற்று, பின்னர் அதன் மூலம் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிரபலமானவர்.

பாடகி மீது புகார்

பாடகி சுசித்ரா தமிழ் சினிமா பிரபலங்களின் ‘கேளிக்கை விருந்து’ கலாசாரத்தில் நடக்கும் அந்தரங்கமான விஷயங்களை அவ்வப்போது புகைப்படத்துடன் வெளியிடுவார். சுசியின் அண்மைய வெளியீடு... தனுஷும் ரவி மோகனின் (ஜெயம் ரவி) மனைவி ஆர்த்தியும் எடுத்துக்கொண்ட புகைப்படம். ரவி மோகனையும் அவரது நெருங்கிய தோழியான பாடகி கெனிஷாவையும் ஆதரித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். சுசியின் இந்தக் கருத்து, ஆர்த்தி குடும்பத்தை அதிரச் செய்துள்ளதால், ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சுசித்ரா மீது புகார் செய்திருக்கிறார்.

ஆலியாவின் ஆசை

பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆசை என்ன தெரியுமா? என்றாவது ஒருநாள் நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் நடித்துவிட வேண்டுமாம். ஃபகத் நடித்த ‘ஆவேஷம்’ மலையாளப் படம் பார்த்ததில் இருந்து, அவரது நடிப்பை ரசிக்க ஆரம்பித்துவிட்டார் ஆலியா. அந்த அற்புதமான நடிகருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிப்பு அனுபவத்தில் மூத்தவரான ஆலியா, இளையவரான ஃபகத்துடன் நடிக்க விரும்புகிறாராம்.

கழிவறை கைப்பிடி தரும் அதிர்ச்சி

பாலிவுட்டின் எதார்த்த நடிகர் நஸ்‌ருதீன் ஷாவின் பண்ணை வீட்டிற்குப் போனவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். காரணம், பலமுறை சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம் ஃபேர்’ விருதுகளைப் பெற்றவர் ஷா. அந்த விருது ‘ஷீல்ட்’ என்பது, ஒரு பெண்ணின் உருவம் கொண்ட கறுப்பு நிறத்தாலானது. சிலையின் இடுப்புப் பகுதி சிறுத்து இருக்கும். சிலையைப் பிடிக்க லாவகமான அந்த விருதுப் பொம்மைகளைத் தனது பண்ணை வீட்டின் கழிப்பறை கதவுகளின் கைப்பிடியாகப் பயன்படுத்தி வருகிறார். இது அதிர்ச்சிதானே! அதற்கு ஷா சொல்லும் விளக்கம் வித்தியாசமாக உள்ளது.

“தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒவ்வொரு நடிகரும் சிறந்த நடிகர்தான். ஆனால், வருடத்திற்கு ஒருவரை ‘சிறந்த நடிகர்’ எனத் தேர்வு செய்வது என்பது, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகர்களைப் புறக்கணிக்கும் செயல் எந்த அளவுக்கு நியாயமாக இருக்கப் போகிறது? நான் அந்த விருதுகளைப் பற்றி பெருமைப்படவில்லை. அதனால்தான் அந்த விருதுகளை கழிப்பறை கைப்பிடிகளாக பிடிக்கச் செய்தேன்.” எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஷா.

செய்தியை மறுக்கும் ராதிகா

பூரி ஜெகநாத் இயக்கத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தாம் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. அந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக, யாரும் தம்மை அணுகவில்லை என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “இப்படியோர் செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது,” எனக் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.

இன்ஸ்டகிராமைக் குறைகூறும் தமன்னா

தமன்னா, தீபிகா படுகோன் இடையே திடீர் உரசல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தாம் ஒப்புக்கொண்ட ஒரு படத்தில் இருந்து தீபிகா படுகோன் திடீரென வெளியேறியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், யூடியூப் தளத்தில் தீபிகாவை விமர்சித்து வெளியான ஒரு காணொளியை தமன்னா ‘லைக்’ செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், தமன்னாவோ, இதை மறுத்துள்ளார். “தொழில்நுட்ப கோளாறும்தான் இதற்கு காரணம். இதை இன்ஸ்டகிராம் நிறுவனம் சரிசெய்ய வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்