ஜனவரி மாதம் விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் நேரடியாக மோதும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் சூர்யாவும் விக்ரமும் மோத உள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படம் பிப்ரவரி 19ஆம் தேதி திரைகாண உள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, இப்படத்தின் மின்னிலக்க உரிமம் எதிர்பார்த்த தொகைக்கு விற்பனையாகாததால் பட வெளியீட்டைத் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 19ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் திரைகாண இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படம் பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக முடங்கிக்கிடந்தது. வெளியீட்டுக்குத் தயாராக இருந்தபோதும் படம் வெளியாகாததால் விக்ரம் உட்பட மொத்த படக்குழுவினரும் வருத்தத்தில் இருந்தனர்.
பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டாலும், படம் என்னவோ வெளியாகவே இல்லை.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

