தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோடம்பாக்க வலம்: சுவைத் தகவல்கள், சர்ச்சைகள், சுவாரசியங்கள்

4 mins read
92fafc7e-69a9-46bf-847e-597a4f907544
இயக்குநர் ஏ.எல்.விஜய். - படம்: ஊடகம்
multi-img1 of 8

[ο] தென்னிந்திய திரையுலகம் குறித்து நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஓடிடி தளங்களின் செயல்பாடுகளை அவர் பெரிதும் பாராட்டி உள்ளார். வயதான நடிகைகளுக்கு கதாநாயகியாக வாய்ப்பு தருவதுடன், தரமான படைப்புகளை ரசிகர்களிடம் கொண்டு செல்வது ஓடிடி தளங்கள்தான் என்கிறார் ஜோதிகா.

[ο] நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா. இவருக்கும் தந்தையைப் போல் இயக்குநராக வேண்டும் என்பதுதான் கனவாம். மகளின் விருப்பத்தை அறிந்த சுந்தர்.சி, தமது மகளின் ஆசைக்கு அணைபோடாமல் ஊக்கமளித்துள்ளார். தற்போது இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பயிற்சி பெற்று வருகிறார் அனந்திதா.

[ο] நடிகர் சிங்கம் புலியின் அண்மைய பேட்டி விஜய் ரசிகர்களைக் கோபப்படுத்தி உள்ளதாகத் தகவல். திரையுலகில் இருந்து விஜய் விலகிவிட்டாரே, அதனால் ஏதும் பாதிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு, “யார் இருந்தாலும் இல்லையென்றாலும் திரையுலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர்,” என்று பதிலளித்துள்ளார் சிங்கம்புலி.

[ο] தனுஷை வைத்து ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இது ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படமாம்.

[ο] ‘ஜெயிலர்-2’ படத்துக்குப் பின் இரண்டு மாதம் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினி. அதன் பின்னர் ‘பேட்ட’ கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணியாற்றுவாராம். இதற்கான கதையை முன்பே கார்த்திக் அவரிடம் விவரித்துவிட்ட நிலையில், அந்தச் சமயத்தில் உடனடியாகப் பட வேலைகளைத் தொடர முடியவில்லை என்றும் இப்போதுதான் வாய்ப்பு, சூழல் அமைந்ததாகவும் இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

[ο] ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சரவண ராஜேந்திரனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். ‘மெஹந்தி சர்க்கஸ்’ போன்று இதுவும் அழுத்தமான ஒரு கதை. “கடந்த டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கி முழு வீச்சில் நடத்தி முடித்துவிட்டோம். தர்மபுரி, பாலக்கோடு சுற்றுவட்டாரங்களில் முழுப் படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது,” என்கிறார் சரவண ராஜேந்திரன். இவர், இயக்குநர் ராஜு முருகனின் சகோதரர் ஆவார்.

[ο] அண்மையில் இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ‘டிராகன்’ அஸ்வத். காரணம், வெற்றிமாறன்தான் இவருக்கு முதன்முதலாக வாழ்த்து கூறி நம்பிக்கை ஏற்படுத்திய இயக்குநராம்.

“என்னுடைய ‘முதல் முத்தம்’ குறும்படம், விழா ஒன்றில் திரையிடப்பட்டது. அதற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனாலும், அந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் என்னை வாழ்த்தி, ‘நீ சிறந்த எழுத்தாளராக வருவாய்’ எனச் சொன்னது என் மனதில் நிற்கிறது. அவருடைய வாழ்த்துகளால்தான் ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை எழுதி, இயக்க முடிந்ததாக நினைக்கிறேன்,” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அஸ்வத்.

[ο] இயக்கம், படத் தயாரிப்பு என்று ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார் ஏ.எல்.விஜய். இவர் ‘மதராசபட்டினம்’, ‘கிரீடம்’, ‘தலைவா’ உட்பட பல படங்களை இயக்கி பெயர் பெற்றவர். இப்போது அடுத்தகட்டப் பாய்ச்சலாக, சினிமா தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இது விஜய்யின் நீண்ட நாள் கனவாம். ஸ்டுடியோ திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகுமார், இயக்குநர்கள் பிரியதர்ஷன், பாலா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எனப் பலரும் வந்திருந்து விஜய்யை வாழ்த்தியுள்ளனர்.

[ο] பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவை அவருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் மிக விமரிசையாக நடத்த நடிகர் நாகார்ஜுனா திட்டமிட்டிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அழைக்கப்பட உள்ளனர். கோலிவுட்டில் இருந்து கமல், ரஜினி உட்பட பலரும் பங்கேற்கக்கூடும். விழாவில் நாகேஸ்வர ராவுடன் உடன் நடித்த கதாநாயகிகளும் கௌரவிக்கப்பட உள்ளனராம்.

[ο] கொஞ்ச காலம் பெரிய திரையில் தலைகாட்டுவதைத் தவிர்த்துவந்த இசையமைப்பாளர் இமான், இப்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். தான் இசையமைக்கும் ‘லெவன்’ படத்தின் ‘இக்கட.. ரா..’ பாடலில் ஆடவும் செய்திருக்கிறார். அந்தப் பாடலை ஆண்ட்ரியா பாடியிருப்பதுடன், அதில் ஆடியும் இருக்கிறார். சுந்தர்.சியிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்‌ஷன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ், ‘லெவன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார்.

[ο] பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ விக்னேஷை நினைவில் இருக்கிறதா! சேரனுடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் மூலம் தனது இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தவர், இப்போது மீண்டும் நாயகனாக நடிக்கிறாராம். படத்தின் பெயர் ‘ரெட் ஃப்ளவர்’. “இந்தப் படம் அறிவியலும் அதிரடி சண்டைகளும் நிறைந்த கதையுடன் உருவாகிறது. மொத்த பட்ஜெட் ரூ.30 கோடி. கணினித் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அமெரிக்காவில் கிராஃபிக்ஸ் பணிகள் நடக்கின்றன,’’ என்கிறார் விக்னேஷ்.

[ο] போலி கணக்குகள்: எச்சரித்த கயாது

சமூக ஊடகங்களில் தன் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதாகவும் யாரும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களை மீண்டும் எச்சரித்துள்ளார் இளம் நாயகி கயாது லோகர்.

தற்போது தமிழில் ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வரும் கயாது, விரைவில் ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், கயாது லோகரின் பெயரில் ‘எக்ஸ்’ தளத்தில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன. இதைக் கவனித்த அவர், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

“சமூக ஊடகங்களில் இந்த ‘எக்ஸ்’ கணக்கு தவிர என் பெயரில் வேறு எந்தக் கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலி கணக்குகள் என்பதால் அவற்றில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரபூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார் கயாது.

குறிப்புச் சொற்கள்