தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘விடுதலை’ முதல் ‘விடாமுயற்சி’ வரை

5 mins read
4aff1cbc-a617-40b3-937c-92e1e132e4e1
நடிகைகள் நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, காஜல் அகர்வால், திரிஷா, ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்
multi-img1 of 7

[ο] ‘விடுதலை 2’ படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்கிறது படத்தின் தயாரிப்புத் தரப்பான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட். எனவே, இயக்குநர் வெற்றிமாறனுடன் மீண்டும் கைகோக்கிறதாம் இந்நிறுவனம். இம்முறை இக்கூட்டணியில் நடிகர் தனுஷும் இணைந்துவிட்டார். மேலும், ‘விடுதலை’க்குப் பின் சூரியை வைத்தும் ஒரு படத்தை இதே நிறுவனம் தயாரிக்கிறது. ‘விடுதலை’யில் பணியாற்றிய மதிமாறன் புகழேந்திதான் சூரியை இயக்குகிறார்.

[ο] ஆண்ட்ரியா ‘பிசாசு 2’ படத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அவர் துணிச்சலாக சில காட்சிகளில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் படம் வெளியாவதில் இருந்த சிக்கல்கள், ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டனவாம். படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல். இப்படத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறக்கூடிய ஒரு கௌரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

[ο] செல்வராகவனின் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் வாமிகா கபி. இப்போது இந்தி, பஞ்சாபி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், அட்லி தயாரித்த ‘பேபி ஜான்’ படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, ‘ஜி 2’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமானவர், அதன் படப்பிடிப்பிற்காக ஐரோப்பியா பறந்து திரும்பியுள்ளார். இப்போது ஜெயம் ரவியின் ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார் வாமிகா.

[ο] விதார்த்தை வைத்து ‘மருதம்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் கஜேந்திரன். இவர் மோகன்ராஜா, பொம்மரிலு பாஸ்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் கதையாம். கைவிட்டுப் போகும் அவனது நிலத்திற்கும் அவனுக்குமான உறவை, சமூக அக்கறை மிகுந்து அழுத்தமாகப் பேசி இருக்கிறது ‘மருதம்’ படம்,” என்கிறார் விதார்த்.

[ο] 12 ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களால் ‘மத கஜ ராஜா’ படத்தின் வெளியீடு தடைபட்டது. தற்போது பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இது நாயகன் விஷால், சுந்தர்.சி ஆகியோரை மட்டுமல்ல, படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட சதாவையும் மகிழ வைத்துள்ளது. தற்போது வனப்பகுதிக் காட்சிகளைப் படமெடுக்கும் புகைப்படக்காரராக வலம் வருகிறார் சதா. சென்ற ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள ரண்தம்போர் தேசியப் பூங்காவுக்குச் சென்ற சதா, அங்கு பொழுதுபோக்காக கேமராவைத் தூக்க, அது தற்போது பெரிய அளவில் அவருக்கு அடையாளத்தைக் கொடுத்ததில் உற்சாகத்தில் உள்ளார்.

[ο] ‘பிரேமலு’ மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மமிதா பைஜு. இந்த 2025 ஆண்டு தமிழில் அவருக்கு ராசியான ஆண்டாகிறது. விஜய், விஷ்ணு விஷால் படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் கடைசியாக நடிப்பதாக சொல்லப்படும் ஹெச்.வினோத்தின் படத்தில் மமிதாவுக்குக் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

[ο] தனுஷை வைத்து இயன்ற விரைவில் ‘வடசென்னை 2’ படத்தை முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால், தனுஷ் அடுத்தடுத்து சில படங்களில் நடிப்பதால், இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியும். எனவேதான் ‘வாடிவாசல்’ படத்தைக் கையில் எடுத்தாராம் வெற்றிமாறன். இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

[ο] ‘விடாமுயற்சி’ படத்துக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் அஜித்தைப் பொறுத்தவரை மிகுந்த மனநிறைவுடன் உள்ளாராம். சரியான அளவீட்டில் ஸ்டைலாக படம் உருவாகி இருப்பதாக இயக்குநர் மகிழ் திருமேனியைப் பாராட்டியிருக்கிறார். சூட்டோடு சூடாக மகிழுக்கு இன்னொரு படம் இயக்குவதற்கான வாய்ப்பை அஜித் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

[ο] விஜயகாந்தின் ‘வல்லரசு’ படத்தை இயக்கியவர் என்.மகா ராஜன். அதன் பின்னர், அஜித்தை வைத்து ‘ஆஞ்சநேயா’, அர்ஜுனை வைத்து ‘அரசாட்சி’ என அசத்தலான படங்களை இயக்கினார். இடையே பாலிவுட் சென்றார். அங்கே கதாசிரியராக இயங்கிய மகாராஜ், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களை இயக்க முடிவு செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரை வைத்து மகாராஜன் இயக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பு அநேகமாக ஏப்ரல் மாதம் தொடங்கக்கூடும்.

[ο] குறுகிய காலத்திலேயே திறமையான நடிகை எனப் பெயர் வாங்கியுள்ளார் நிமிஷா சஜயன். கடந்த 2024ல் இந்தியில் வெளியான ‘லன்த்ரானி’ என்ற ஆந்தாலஜி வகைப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான நிமிஷா, அதன் பின்னர் தமிழில் கதை நாயகியாக ‘என்ன விலை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கதை நாயகனாக நடித்திருப்பவர் கருணாஸ். இது அரசியலும் திகிலும் கலந்த கதையாம். சென்னை, ராமேஸ்வரம், புதுச்சேரி, கொச்சி உட்பட 56 இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.

[ο] திருமணத்திற்குப் பின், மலையாளப் படவுலகில் கவனம் செலுத்தி வந்தார் ‘நாடோடிகள்’ அனன்யா. அண்மையில் வெளியான ‘திரு.மாணிக்கம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இரண்டாவது சுற்றைத் தொடங்கியிருக்கிறார். “நான் ‘நாடோடிகள்’ படத்திற்குப் பின் சினிமாவில் பிசியாவேன், சினிமாதான் இனி என் தொழில் என்று நான் நினைத்ததில்லை. 50 படங்களுக்கு மேல் நடித்தது எனக்கே ஆச்சரியம்தான்,” என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் அனன்யா நடிப்பில், அடுத்து திரைக்கு வரும் படம் ‘டீசல்’. இதில் ஹரிஷ் நாயகனாக நடித்துள்ளார்.

[ο] பிரகாஷ்ராஜ் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் மட்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாா். தமிழ், கன்னடப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். வெகு நாள்களாக சொந்தத் தயாரிப்பை நிறுத்தியிருந்த அவர், இப்போது புதுப் படம் ஒன்றைத் தயாரிப்பதுடன் தாமே அதை இயக்கவும் முடிவு செய்துள்ளாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அந்தப் படம் வெளியாக உள்ளது.

[ο] ‘கருடன்’ படத்திற்குப் பின் சூரி நடித்துவரும் ‘மாமன்’ படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மும்முரமாக நடந்துவருகிறது. சூரியுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ‘லப்பர் பந்து’ சுவாசிகாவும் நடித்து வருகின்றனர். ‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், இப்படத்தை இயக்கி வருகிறார். “ஆறு வயதுச் சிறுவனுக்கும் தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாகப் பேசுகிறது ‘மாமன்’ படம்,” என்கிறார் சூரி.

[ο] ‘விடாமுயற்சி’ படத்துக்கு அடுத்ததாக, எதிர்வரும் கோடை காலத்தில் முன்னணி கதாநாயகர்கள் பலரது படங்கள் வெளியாக உள்ளன. ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யும், தனுஷின் ‘இட்லி கடை’யும் திரைக்கு வருகின்றன. இப்போது கார் பந்தயப் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அஜித், தன்னுடைய அடுத்த படத்தை அக்டோபரில் அறிவிப்பாராம்.

குறிப்புச் சொற்கள்