தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோடம்பாக்கத்து வம்புகள், வழக்குகள்

4 mins read
88770bb3-1e11-4c12-bfec-73a5995f3d29
நயன்தாரா. - படம்: ஊடகம்
multi-img1 of 5

வம்பு, தும்பு, வழக்கு, பிணக்குகளால் பரபரத்தபடியே இருக்கிறது கோடம்பாக்கம்.

இது வம்பு:

அண்மையில் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, கார் பல்டி காட்சியில் நடித்த சண்டைக் கலைஞர் மோகன்ராஜ் இறந்துபோனார்.

இதையொட்டி, சில நாள்களுக்கு முன் சண்டைப் பயிற்சியாளர் ‘ஸ்டண்ட்’ சில்வா ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார்.

“கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்புறுதி (இன்ஷுரன்ஸ்) வசதி செய்து கொடுத்து வருகிறார் சூர்யா. இதற்காக ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய் வரை அவர் செலவிடுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார் சில்வா.

ஆனால், பாலிவுட் நாயகன் அக்‌ஷய் குமார் 650 சண்டைக் கலைஞர்களுக்கு காப்புறுதி எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதைப் பாராட்டி, “இங்குள்ள நடிகர்களுக்கு ஏன் இப்படித் தோன்றவில்லை, வாழ்த்துகள் அக்‌ஷய் சார்,” எனப் பாராட்டியிருந்தார் இயக்குநர் மோகன்.ஜி.

(‘பழைய வண்ணாரப்பேட்டை’, திரௌபதி’, ‘பகாசூரன்’ படங்களை இயக்கியவர்.)

இதையடுத்து, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சூர்யா பற்றி கூறியதை மோகன்.ஜிக்கு அனுப்பி வைத்தனர் சூர்யாவின் ரசிகர்கள்.

இருதரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இது வழக்கு:

நயன்தாராவுக்கு சிக்கல் மேல் சிக்கலாக வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படம் கடந்த 2024 நவம்பரில் ‘நயன்தாரா: தேவதைக்கு அப்பால்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி, தொடர்ந்து ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது.

இதில் தனுஷ் தயாரித்து, விக்னேஷ் சிவன் இயக்கி, நயன்தாரா நடித்த படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளரான தன்னிடம் அனுமதி பெறாமல் ‘நானும் ரௌடிதான்’ படக் காட்சிகளைப் பயன்படுத்தி இருப்பதால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன், விக்னேஷ், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் மீது தனுஷ் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதையடுத்து, ரஜினியுடன் நயன் நடித்த, ‘சந்திரமுகி’ படத்தின் சில காட்சிகளும் இந்த ஆவணப் படத்தில் சேர்க்கப்பட்டதால், அப்படத்தின் உரிமையை இப்போது வைத்திருக்கும் ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.

இதற்கு நயன் தரப்பில் பதில் இல்லை.

இதனிடையே, ஆவணப் படத் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடும், காட்சிகளை நீக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது ஏ.பி.இன்டர்நேஷனல். கூடவே, இந்த ஆவணப்படம் மூலம் கிடைத்த லாபக் கணக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அந்நிறுவனம் வழக்கிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க விக்னேஷ் சிவனுக்கும் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இது வம்பு:

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த கேரள நடிகர் விநாயகன் மீது கேரள காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

கேரள முன்னாள் அமைச்சர் உம்மன்சாண்டி இறந்தபோது, கேரள அரசு மூன்று நாள் துக்கம் அனுசரித்தது. அச்சமயம் விநாயகன் ஒரு காணொளியை வெளியிட்டார்.

அதில், “யார் இந்த உம்மன் சாண்டி? அவர் இறந்ததற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என் அப்பாகூட இறந்துவிட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு மூன்று நாள் விடுமுறை எதற்கு? அவரை நல்லவர் என்று நீங்கள் சொல்லலாம். நான் சொல்ல மாட்டேன்.”

- இப்படி சர்ச்சையாக அக்காணொளியில் பேசியிருந்தார்.

சில நாள்களுக்கு முன் கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘இன்குலாப் சிந்தாபாத்’ எனக் கறுப்பு உடையில் விநாயகன் கோஷமிட்டு காணொளி வெளியிட்டார்.

இதனால் விநாயகனுக்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

விநாயகன் அதிகமாக மதுஅருந்துவிட்டு, போதையில் பொது இடங்களில் பலமுறை ரகளை செய்து, கைதாகி, பிணை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வழக்கு:

தன் மீது போடப்பட்ட வழக்கிற்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்த ரவிமோகனுக்கு (ஜெயம் ரவி) அவர் போட்ட வழக்கே சிக்கலாகி இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

“நடிகர் ரவிமோகனை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டு 2024 செப்டம்பரில் அவருடன் ஒரு ஒப்பந்தம் போட்டோம். முதல் படத்திற்குச் சம்பளமாக ரூ.15 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு, 5 கோடி 90 லட்சம் ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டது.

“ஆனால், ஒப்பந்தத்தை மீறி, வேறு படங்களில் நடித்து வரும் ரவிமோகனிடம் கொடுத்த முன்பணத்தை திரும்பத் தருமாறு கேட்டோம். திருப்பித் தர ஒப்புக்கொண்டவர் இதுவரை பணத்தைத் தரவில்லை. இதனால் ரூ.5.90 கோடி முன்பணத்தையும் அதற்குரிய இழப்பீடாக வட்டியையும் திருப்பித்தர ரவிமோகனுக்கு உத்தரவிட வேண்டும்”.

- இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிறுவனத்துக்கு கால்ஷீட் தராமல் தனது ‘புரோ கோட்’ பட வேலைகளைக் கவனித்து வருகிறாராம் ரவிமோகன்.

இந்நிலையில், ரவிமோகன் எதிர்மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் அவரது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, முன்பணமாக வாங்கிய ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இது வம்பு

நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன்’ படம் இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அதன் பின்னர் திரிஷாவை வைத்து ‘மாசாணியம்மன்’ படத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில், சூர்யாவை வைத்து படம் இயக்க வாய்ப்பு வரவே, திரிஷாவுக்காக உருவாக்கப்பட்ட ‘மாசாணியம்மன்’ கதையை சூர்யாவுக்கான கதையாக மாற்றி, ‘கருப்பு’ என்ற பெயரில் படத்தைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் பாலாஜி. இதில் கதாநாயகி வேடத்தில் திரிஷா நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, ‘கருப்பு’ பட டீசர் வெளியிடப்பட்டது. ஆனால், படத்தின் நாயகி திரிஷா ‘கருப்பு’ பட டீசரை தனது வலைப்பக்கத்தில் பகிரவில்லை. சூர்யாவுக்கு வாழ்த்தும் சொல்லவில்லை.

இதற்குக் காரணம், கதை மாற்றப்பட்டு, ‘மாசாணியம்மன்’ வாய்ப்பு போனதும், ‘கருப்பு’ பட டீசரில், ஒரு காட்சியில்கூட திரிஷாவைக் காட்டாததும்தான் காரணம் என்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்