அண்மைய சில நாள்களாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் சில புகைப்படங்களை நீங்களும் பார்த்திருக்கக்கூடும்.
‘இப்படிகூட நடக்க வாய்ப்புள்ளதா?’ என்று பார்த்த அனைவரையும் கேள்வி கேட்க வைத்துள்ளன, ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அந்தப் படங்கள்.
கோடம்பாக்கத்தின் உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ள இந்தப் புகைப்படங்களில் அனைவருமே எளிமையான தோற்றம், இயல்பான பின்னணியில் காணப்படுகின்றனர் என்பதுதான் ‘ஹைலைட்’.
உற்று நோக்கினால்தான், ‘ஏஐ’ என்பதே தெரிய வரும். அந்த அளவிற்கு கச்சிதமாக உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த கணினி நிபுணர் ஹரிஹரன்.
சென்னையில் மின்னிலக்க நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், ‘ஏஐ’ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதாகக் கூறுகிறார்.
“அண்மையில் நான் வெளியிட்ட படங்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. திரைப் பிரபலங்களுக்கும்கூட இப்படி ஜாலியாக, சுதந்திரமாக நண்பர்களுடன் வெளியே சென்று வாழ்க்கையை ரசிக்கும் ஆசை இருக்கும். நிஜத்தில் பெரும்பாலும் அது சாத்தியம் அல்ல. அதனால் ‘ஏஐ’ மூலம் அதைச் சாத்தியமாக்கி உள்ளோம்.
“மற்ற அம்சங்களைக் கடந்து வடசென்னை பகுதி, இரவு நேரத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு, எளிமையான உடையில் காட்சியளிக்கும் பிரபலங்கள்தான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பம்சங்கள் எனலாம். இது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை.
“எதையும் பெரிதாகத் திட்டமிட்டுச் செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒரு வசதி ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் கிடைப்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம,” என்கிறார் ஹரிஹரன்.

