தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோடம்பாக்க வலம்: ரஜினி முதல் ராஷ்மிகா வரை

6 mins read
6e8626e9-a514-43a7-a0b2-3707f6154554
திரையுலக நாயகிகள். - படம்: ஊடகம்
multi-img1 of 8

[ο] ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘கூலி’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியோடு நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நெல்சனின் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் இணைகிறார். இந்தப் படத்திற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு நெல்சனிடம் சொல்லிவிட்டார் ரஜினி. அனேகமாக ஏப்ரலில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்கின்றனர்.

[ο] ஏற்கெனவே ஜெயலலிதா வாழ்க்கைக் கதையில் ‘தலைவி’ தமிழ்ப்படத்தில் நடித்த கங்கனா ரணாவத், இந்தியில் ‘எமர்ஜென்சி’ எனும் 1970களின் இந்திய அரசியல் தொடர்பான படத்தில் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இப்படத்திற்காக தனது வீடு ஒன்றை விற்றுள்ளார் பாஜக எம்பியுமான கங்கனா.

[ο] கமல், ரஜினி, விஜய் என பெரிய கதாநாயகர்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக அஜித் படத்தை இயக்குகிறார். துபாயில் நடந்த பொங்கல் விழாவில் இதைத் தெரிவித்திருக்கிறார் லோகேஷ்.

[ο] விஜய் நடித்து வரும் அவரது கடைசிப்படம் என சொல்லப்படும் ‘விஜய் 69’, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்தகேசரி’ மறுபதிப்பு எனக் கூறப்படுகிறது. ஆனால் சில காட்சிகளைப் படப்பிடிப்பில் பார்த்துவிட்டு இப்படியோர் பேச்சு எழுந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

[ο] உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்த ஜெயம் ரவி, அடுத்து பெண் இயக்குநர் படத்திலேயே நடிக்கிறார். சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படம் தந்த சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

[ο] ‘அந்நியன்’ இந்திப் பதிப்பை ரன்வீர்கபூர் நடிப்பில் இயக்க இருப்பதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார் ஷங்கர்.

[ο] விஜய்க்கு நெருக்கமானவராக திரிஷா அறியப்படும் நிலையில் ‘சீக்கிரமே திரிஷா அமைச்சராகிவிடுவார்’ என மன்சூர் அலிகான் சலசலப்பு கிளப்பியிருக்கிறார்.

[ο] ஃபகத் ஃபாசில் நாயகனாக நடிக்கும் ‘மாரிசன்’ படத்தில் இணை நாயகனுக்குச் சமமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு.

[ο] கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தை முடித்திருக்கும் சூர்யா, அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியின் ‘பேட்டைக்காரன்’ படத்தில் நடிக்கிறார்.

[ο] சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட படம் ‘வாடிவாசல்’. இதற்காக மஞ்சுவிரட்டுக் காளைகளிடம் பயிற்சி பெற்றார் சூர்யா. இப்போது அடுத்தகட்ட நகர்வாக, படத்தின் நாயகியாக ‘கட்டாகுஸ்தி’ ஐஸ்வர்யா லட்சுமி தேர்வாகியுள்ளார்.

[ο] தொடர் நஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் லைகா நிறுவனம், இயக்குநர் சங்கரின் ஆயிரம் கோடி பட்ஜெட் படத்திட்டமான ‘வேள்பாரி’யைக் கிடப்பில் போட்டுள்ளதாகத் தெரிகிறது.

[ο] ‘அசுரன்’ கூட்டணியான தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள்.

[ο] இருவரும் ‘வடசென்னை-2’க்காக இணையத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்ச்சி கதையல்ல, ‘புதிய கதை’ எனவும் தெரியவந்துள்ளது.

[ο] கார்த்தி நிறுவியுள்ள ‘உழவன் ஃபவுண்டேஷன்’ அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளைத் தேர்வு செய்து விருதும் ஒரு லட்ச ரூபாய் பணமும் வழங்கி வந்தது. ‘உழவன் விருது’ 2025ல் இருந்து விருதுத் தொகை இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

[ο] ராமாயணம் என்ற தலைப்பில் உருவான திரைப்படம் தற்போது, ‘ராமாயணம்: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ என்ற பெயரில், நவீன தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படமாக உருவாகியுள்ளது.

[ο] விஷாலுக்கு ஏறுமுகமாக அமைந்திருக்கிறது பொங்கலுக்கு வந்த ‘மத கஜ ராஜா’. படம், வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மலேசியா உட்பட பல நாடுகளில் வெளியான இப்படத்தின் வசூல் அசத்தலாக உள்ளதாம். விஷால், சந்தானம், சுந்தர்.சி கூட்டணி இடைவிடாமல் சிரிக்க வைப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

[ο] சீனாவுக்கு அடுத்தபடியாக துபாயிலும் வசூல் அள்ளி அசத்தி இருக்கிறது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’.

[ο] உடல் எடையைக் குறைப்பதற்காக கடந்த சில வாரங்களாக வெந்நீரும் சில புரோட்டின் மாத்திரைகளும் மட்டுமே உட்கொண்டு வந்துள்ளார் அஜித்.

[ο] அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

[ο] கடந்த 1980களில் வந்த, ஷோபா நடித்து துரை இயக்கிய ‘பசி’ படத்தில் முதல் காட்சியிலேயே ஓர் ஏழைச் சிறுவன் ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களைப் பார்ப்பான். அதில் ‘புரட்சித் தலைவர் வாழ்க, கலைஞர் வாழ்க’ என வரிசையாக எழுதப்பட்டிருக்கும். உடனே அச்சிறுவன் ஒரு கரிக்கட்டையால் ‘அது சரி… நாங்கள் எப்போது வாழ்வது?’ என எழுதியிருப்பான். இந்தப் படத்திற்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர், அரசு விருது கொடுத்து கௌரவித்தார். பெரும்பாலான நாயகர்கள் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.

[ο] இன்றைய நாயகர்களில் அஜித் அதில் முதன்மையானவர். அந்தப் பேட்டியில் அவர், “என் ரசிகர்களே, படத்தைப் பார்த்துவிட்டு, ‘அஜித் வாழ்க, விஜய் வாழ்க’ என சொல்றீங்களே, நீங்க எப்போ வாழப்போறீங்க? நீங்கள் நன்றாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சி அடைவேன்,” எனக் கூறியிருக்கிறார்.

[ο] இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பிரபல நிறுவனம் நடத்திய விழாவில் பங்கேற்று, கீர்த்தி சுரேஷ், அவரது கணவருடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார் விஜய். ‘பொங்கல் நாள் அதுவுமா குடும்பத்துடன் கொண்டாடாமல் தளபதி இப்படிச் செய்கிறாரே? என ரசிகர்கள் வருத்தப்பட்டார்களாம்.

[ο] சுமார் ஐநூறு கோடி ரூபாய் செலவில் தெலுங்கில் எடுக்கப்பட்டது ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம். ராம் சரண் நடித்த இந்தப் படத்தை சங்கர் இயக்கியிருந்தார். எனவே, சங்கரின் ‘முதல்வன்’, ‘ஜென்டில்மேன்’ படங்களை நினைவூட்டும் காட்சிகளே படத்தில் அதிகம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இப்படத்தால் தயாரிப்பாளர் தில்ராஜு தன் பிரம்மாண்ட பங்களாவை கிட்டத்தட்ட இழக்கும் நிலையில் இருக்கிறாராம்.

“பசியோடும் பட்டினியோடும் இருப்பார்கள் தென்னிந்திய ரசிகர்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு திரைப்பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடுவார்கள்,” என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

[ο] விஜய்யின் ‘தளபதி 69’ படத்தில் வயதான தோற்றத்தில், அதிபயங்கர வில்லனாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். படப்பிடிப்பிற்கு இரண்டு நாள்களுக்கு முன்கூட்டியே சென்னைக்கு வந்து இயக்குநரைச் சந்தித்துவிடுகிறார். தான் பேச வேண்டிய வசனங்களை முன்பே பெற்றுக்கொண்டு கொஞ்சம் பயிற்சி மேற்கொள்கிறாராம் பாபி. கடந்த முறை விஜய்யின் வீட்டிலிருந்து அவருக்கு மதிய உணவு அளித்திருக்கிறார்கள்.

[ο] சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, அடுத்து அவரை வைத்தே படம் இயக்க உள்ளார். தற்போது தலைப்புத் தேர்வு நடந்து வருகிறது. அனேகமாக சிவாவின் ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் தேர்வாகக்கூடும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மிருணாளுக்கு ராசியான ஆண்டு. பாலிவுட்டில் மட்டும் அரை டஜன் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

[ο] ‘விருமன்’, ‘மாவீரன்’ படத்தின் கதைகளைக் கேட்ட பின்னரே, அதில் நடிக்க ஒப்புக்கொண்டார் அதிதி சங்கர். ஆனால், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவரை நடிக்கக் கேட்டதும், உடனே ஓகே சொல்லிவிட்டார் அதிதி. அதன் பின்னர்தான் அதிதியிடம் கதையைச் சொல்லியிருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கிடையே, அதிதி முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாகும் ‘பைரவம்’ காதலர் தினத்தன்று வெளியாகிறது. இதில் பெல்லம் கொண்டா சாய் சீனிவாஸ்தான் கதாநாயகன். அதிதியின் கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணிலாவாம்.

[ο] இயக்குநர் சங்கத் தலைவரான ஆர்.வி.உதயகுமார், திரையுலகைப் பற்றி அழுத்தமான தகவலை உதிர்த்திருக்கிறார். “சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இங்கே சினிமாவில் அரசியலையும் கலந்ததுதான் பிரச்சினை. சினிமாவில் அரசியல் இருக்கலாம். அரசியலில் சினிமா இருக்கக்கூடாது”, என்கிறார் உதயகுமார்.

[ο] அண்மையில் வெளியான ‘மத கஜ ராஜா’ படம், ஐந்து நாள்களில் 30 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாம். விரைவில் இது ரூ.50 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[ο] தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம், பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[ο] ராஷ்மிகா மந்தனா அண்மையில் உடற்பயிற்சி செய்கையில் வலது காலில் அடிபட்டு ஓய்வில் இருக்கிறார். மூன்று வாரங்களுக்கு படுக்கை ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் சொன்னதால், “என்னால் பாதிக்கப்பட்ட படத் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்,” என ராஷ்மிகா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்