தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து மாதங்களில் நூறு படங்கள்

2 mins read
67efd046-eca7-4c67-9ffd-8c5814355a0f
‘மத கஜ ராஜா’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் நிலைமை மோசமாகிவிட்டது. தயாரிப்பாளர்கள் பலர் நொடித்துப் போய்விட்டனர். விநியோகிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் படாதபாடு படுகிறார்கள் என்ற கவலை தோய்ந்த புலம்பல்கள் பல்லாண்டுகளாக ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கதாநாயகர்களும் தங்கள் ஊதியத்தைக் குறைத்தபாடில்லை என்பதே உண்மை நிலவரம்.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் தமிழில் நூறு திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகி உள்ளன.

ஜனவரியில் 26 படங்கள், பிப்ரவரியில் 19, மார்ச் 19, ஏப்ரல் 11, மே 25 என்று படங்கள் வெளியீடு கண்டுள்ளன. கடந்த ஆண்டும் கிட்டத்தட்ட இதே நிலைதான். 2024ல் மேத மாத இறுதிக்குள் மொத்தம் 100 படங்கள் வெளியாகி இருந்தன. அடுத்த ஏழு மாதங்களில் மேலும் 130 படங்கள் வெளியாகி மொத்த படங்களின் எண்ணிக்கை 230 ஆனது.

இந்த ஆண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானதில் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழச்சி. அதிலும் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வசூலிலும் சாதித்துள்ளது.

இதையடுத்து, சூரி நடித்த ‘மாமன்’, சசிகுமார் நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகியவற்றின் வசூல் நிலவரமும் அசத்தலாக உள்ளது என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

நடப்பாண்டில் ‘மத கஜ ராஜா’, ‘குடும்பஸ்தன்’, ‘டிராகன்’ ஆகிய படங்களும் வசூல் ரீதியிலான பட்டியலில் இடம்பெற்றுள்ளதை மறந்துவிடக் கூடாது.

இந்த ஆண்டு மேலும் சில முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியீடு காண உள்ளன. இடையில், சிறிய பட்ஜெட் படங்கள் ஏதேனும் வெளிவந்த வண்ணம் இருந்தால் மொத்தப் படங்களின் எண்ணிக்கை சத்தமின்றி மளமளவென அதிகரிக்கக்கூடும்.

“எனினும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதுதான் பெரும் சிக்கல். பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நாயகர்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துவிடுகின்றன.

“அதேசமயம் குறைந்த செலவில் உருவாகும் படங்களுக்குப் போதுமான விளம்பரம் செய்யப்படுவதில்லை என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

“எந்தவொரு நல்ல படைப்பாக இருந்தாலும், அதுகுறித்து உரிய வகையில் விளம்பரம் செய்யப்பட்டால்தான் அது கடைக்கோடி ரசிகர்களையும் சென்றடையும். இல்லையெனில் இரண்டே நாள்களில் படம் பெட்டிக்குள் போய்விடும்.

“’இந்தியன் 2’ போன்ற படங்களுக்கு பெரும் ஊடக வெளிச்சம் இருந்தபோதும், சாதிக்க முடியவில்லை. எனவே, ஒவ்வோர் ஆண்டும் எத்தனை படங்கள் வெளியாகின்றன என்ற எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டு, அனைத்து படங்களுக்கும் விளம்பர, ஊடக வெளிச்சம் கிடைக்க வேண்டும்.

“திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், இக்கருத்தை முன்னணி இயக்குநர்களும் நாயகர்களும் வலியுறுத்துவது அவசியம். அதேசயம் தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

“அண்மையில் வெளியீடு கண்ட ‘மாமன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்கள் இதற்கான சிறந்த உதாரணங்கள். சிறு படங்களை முடிந்தவரை தூக்கி நிறுத்துங்கள். தட்டுத்தடுமாறி நின்ற பின்னர், தன்னால் நடைபோடத் தொடங்கிவிடும்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்