தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலிவுட்டின் ‘கிளாடியேட்டர்’ கங்குவா: சூர்யா

3 mins read
79e8c28a-d39f-4daf-ba4a-bfb76fc3c737
‘கங்குவா’ திரைப்படத்தில் சூர்யா. - படம்: இணையம்
multi-img1 of 3

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வெவ்வேறு குல வம்சங்களின் வாழ்வியலே ‘கங்குவா’ திரைப்படத்தின் மையக் கதைக்களம்.

குலத்தலைவர்களுக்கு இடையேயான போட்டி, சச்சரவு, அவற்றிலிருந்து மீண்டு வரும் அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று மக்களைப் பாதுகாப்பது என கதை விவரிக்கிறது. இவற்றை பிரம்மாண்ட முறையில் காட்டவிருக்கிறது, வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியீடு காணவுள்ள கங்குவா திரைப்படம்.

தீயை வழிபடும் குலத்தின் தலைவர் ‘கங்குவா’வின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், ரத்தத்தை வழிபடும் குலத்தலைவரும் வில்லனுமான ‘உதிரன்’ கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் பாபி தியோலும் திரைப்படத்தில் மோதுகின்றனர்.

“இக்கதாபாத்திரம் எனக்கு முற்றிலும் புது அனுபவம்,” என்று ‘கங்குவா’ நாயகர் சூர்யா தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு இணையவழி நேர்காணலின்போது சொன்னார். இதுவரை காணாத பரிமாணத்தில் அவரை இத்திரைப்படம் காட்டியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கடுமையாக உழைத்து, ‘கங்குவா’வின் தீவிரமான சண்டைக்காட்சிகளுக்காக தயாராகிய அவர், 2011ல் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் இதற்கொப்பான ஒரு வரலாற்றுக் கதாபாத்திரத்தில் தோன்றினார். ஆனால், அத்திரைப்படத்தில் இருந்த காலத்தைவிட பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ‘கங்குவா’வின் கதைக்களம் அமைந்துள்ளதால், நடை, உடை, பாவனை என பல அம்சங்கள் வேறுபட்டுள்ளன.

-

“ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் உள்ளிட்ட அயல்நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன தமிழ் எழுத்துக்களின் வரலாற்றுத் தடங்கள். கடலுக்குள் மூழ்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது பல்லாயிரமாண்டு தமிழ் நாகரிகத்தை ஏந்தியதாக நம்பப்படும் குமரிக் கண்டம். இத்தடயங்கள் தமிழர்களின் ஆதிகால வாழ்வியலைப் பறைசாற்றுபவை,” என்றார் சூர்யா.

“அத்தகைய ஆதிகால மக்கள் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை ‘கங்குவா’ காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கைகள் என்ன, எவ்வாறு அவர்கள் பரிணமித்தார்கள் என்பவையெல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை,” என்று அவர் சொன்னார்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எடுத்தியம்பும் ‘கங்குவா’ திரைப்படக் கதாபாத்திரங்களின் கோபமும் சோகமும் பன்மடங்கு அதிகமாக உணரப்படும். அதுவே அத்திரைப்படத்தின் முக்கிய தனித்துவமும்கூட என்றார் நடிகர் சூர்யா.

நாகரிகத்துக்கு முந்தைய மனிதர்களின் வடிகட்டப்படாத உணர்வுநிலை, உரையாடல்கள் கலைநயத்துடன் அழகாக இயக்குநர் சிவாவால் வசனமாக்கப்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார்.

-

தமிழ்த் திரைத்துறையின் ‘கிளேடியேட்டர்’ ஆக கங்குவா உருவெடுக்கும் என்பது சூர்யாவின் நம்பிக்கை. 2000ல் வெளிவந்த வரலாற்றுப் புனைவுப்படமான கிளேடியேட்டர் உலகப்புகழ் பெற்றது, பல்வேறு விருதுகளைக் குவித்தது. ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தாலும் அப்படத்தின் கதாநாயகன் எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது போலவே, கங்குவாவும் காலத்தைத் தாண்டி உலகமக்களைக் கவர்ந்திழுக்கும் என்றார் அவர்.

“எம்மொழி பேசுபவராக இருந்தாலும், உலகத்தில் எப்பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும், கங்குவாவை கண்டிப்பாக கொண்டாடுவர்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் சூர்யா. இந்திய மொழிகளைத் தவிர்த்து ஸ்பானிஷ், பிரஞ்சு முதலிய அயல்நாட்டு மொழிகளிலும் கங்குவா வெளியீடு காண இருக்கிறது.

கங்குவாவின் வில்லன் கதாபாத்திரத்தில் அரக்கத்தனத்தோடு தோன்றும் பாபி தியோல், சூர்யாவோடு நடிக்கும் வாய்ப்புக்காகவே கங்குவாவில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறி சிரித்தார். நவீன மனிதர்களைப் போலன்றி விலங்குத்தன்மையோடு இருந்த ஆதிகால மனிதர்களாக நடிப்பது சவால்மிக்கதாய் இருந்ததென பகிர்ந்துகொண்ட அவர், இந்த வித்தியாசமான அனுபவத்தின்மூலம் நடிகர் சூர்யாவுடனான தமது உறவு மேம்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில் சூர்யாவுக்கும் பாபிக்கும் இடையேயான பரபரப்பான சண்டைக்காட்சியை மக்கள் எதிர்பார்க்கலாம். இவர்களோடு, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முதலியோரும் கைகோத்துள்ளனர். ஞானவேல் ராஜாவின் தயாரிப்பிலான கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் திட்டமிடப்பட்டிருப்பதாக இயக்குநர் சிவா அண்மையில் அறிவித்திருந்தார்.

vishnuv@sph.com.sg

குறிப்புச் சொற்கள்