தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போராடுபவர்களுக்கே பொற்காலம்

5 mins read
8477c777-8339-463b-9326-53e9110e9a38
லாரன்ஸ். - படம்: ஊடகம்
multi-img1 of 10

ஒரு கதாநாயகன் இயக்குநராக அவதாரம் எடுக்க என்ன காரணங்கள் இருக்க முடியும்?

முழுமையாக தனது திறமையை எடுத்துக்காட்ட, தனது கொள்கைகளையும் லட்சியங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்ல, என்னாலும் ஒரு திரைப்படத்தை இயக்க முடியும் என யாருக்கோ விட்ட சவாலை நிறைவேற்ற, சரிவில் உள்ள தனது திரையுலகச் சந்தை மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்த எனப் பல்வேறு காரணங்களால்தான் ஒரு கதாநாயகன் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

அந்த வகையில் பல நடிகர்கள் ஒரு படத்தை தயாரித்து, நடித்து, இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளனர்.

இருப்பினும் கதாநாயகர்களாக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர்களைப் பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

எம்ஜிஆர்

கடந்த 1969ஆம் ஆண்டிலேயே காட்சியமைப்பில் பலப்பல புதுமைகளைப் புகுத்தி பிரம்மாண்ட இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் எம்ஜிஆர்.

தன் சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து, மேலும் பலரிடம் கடன் வாங்கி எம்ஜிஆர் தயாரித்து, இரு வேடங்களில் நடித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’.

அறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர், திராவிடச் சீர்திருத்த சிந்தனையோடும், தான் பின்பற்றப்போகும் லட்சியக் கொள்கை இதுதான் என்பதையும் திமுகவின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

1965ஆம் ஆண்டிலேயே ‘அடிமைப் பெண்’ படத்தை கால்வாசி இயக்கியிருந்த எம்ஜிஆர், நேரமின்மையால் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்கும் திட்டத்தைக் கைவிட்டார்.

பின்னர், கதையில் நிறைய மாறுதல்கள் செய்து, புதிய அமைப்பில் கே.சங்கர் ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்க, அதை எம்ஜிஆர் தயாரித்தார்.

எம்ஜிஆர் இயக்கித் தயாரித்த மற்றொரு பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ 1973ல் வந்தது. இப்படத்தில் எம்ஜிஆர் வைத்த கேமரா கோணங்கள் இன்றும் அறிமுக இயக்குநர்களுக்கு பாடமாக உள்ளது. இப்போது வெளியிட்டாலும் வசூலை குவிக்கக்கூடிய படம் இது.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் படம் இயக்கி இருக்கிறாரா எனும் கேள்வி வியப்போடு எழும். ஆனால் இயக்கி உள்ளார். 1980ல் கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி, ஸ்ரீபிரியா நடித்த படம் ‘ரத்த பாசம்’.

படப்பிடப்பு தொடங்கியது முதல் விஜயனுக்கும் சிவாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு. இதனால் படத்திலிருந்து திடீரென விஜயன் விலகிக்கொள்ள, பாதிப்படத்தை சிவாஜிதான் இயக்கினார்.

படத்தின் தலைப்பில் சிவாஜியின் பல்வேறு தோற்றங்கள் குறியீடாக காட்டப்பட்டிருக்கும்.

கமல்ஹாசன்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் அமையாமல் இருந்தபோது, அவரின் கவனம் தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பிரபல நடன இயக்குநராக இருந்த தங்கப்பனிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

பிறகு சினிமா தொழில்நுட்பம் குறித்த நூல்களைப் படித்து பட இயக்கம் தொடர்பான உத்திகளையும் கற்றார். நேரடி அனுபவமும் பெற்றார்.

அதனால்தான் ‘அவ்வை சண்முகி’ படத்தின் இந்தி மறுபதிப்பான ‘சாச்சி 420’ படத்தை அவரே நடித்து இயக்கினார். தொடர்ந்து ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம் 1, 2’ ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகும் முத்திரை பதித்தார்.

விஜயகாந்த்

கிட்டத்தட்ட விஜயகாந்தின் கடைசிப்படம் என்று ‘விருத்தகிரி’ படத்தைக் குறிப்பிடலாம்.

கடைசியாக இந்தப் படத்தில்தான் அவர் கதாநாயகனுக்கான அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்து ஆவேசமாக வசனமும் பேசியிருப்பார்.

காவல்துறை அதிகாரியாக நடித்து, தயாரித்து இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் ஆனார்.

சத்யராஜ்

மிகவும் வித்தியாசமான தோற்றங்களில் தோன்றி நடித்து, இயக்குநராகவும் ஆனார் சத்யராஜ்.

அந்தப் படம் ‘வில்லாதி வில்லன்’. ரசிகர்களிடம் இந்தப் படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

அர்ஜுன்

சரிந்து கிடந்த தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த அர்ஜுன் நடித்து இயக்கிய படம் ‘சேவகன்’. படம் நல்ல வசூல் கண்டது.

தொடர்ந்து ‘பிரதாப்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘மதராஸி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’, ‘பரசுராம்’, ‘ஜெய்ஹிந்த் 2’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்தான்.

இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் மகளை நாயகியாக வைத்து ‘சொல்லி விடவா’ என்கிற படத்தையும் அர்ஜுன் தயாரித்து இயக்கினார்.

சரத்குமார்

தனக்கு ஜோடியாக நயன்தாராவை வைத்து சரத்குமார் நடித்து இயக்கிய படம் ‘தலைமகன்’. அடிதடியுடன் கூடிய அதிரடிப் படமாக உருவானது.

‘மைக்’ மோகன்

சினிமா வர்த்தகத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த்தையே சில சமயங்களில் முந்திச் சென்றவர் மோகன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தனது சந்தை மதிப்பை நிலைநிறுத்த மோகன் நடித்து, இயக்கிய படம் ‘அன்புள்ள காதலுக்கு’. ஆனால் இந்தப் படம் கை கொடுக்கவில்லை.

சிம்பு

சினிமாவின் எல்லாத் துறைகளிலும் பங்களிப்பு செய்பவர் சிம்பு. அவர் அதிகாரபூர்வமாக இயக்கிய படம் ‘வல்லவன்’.

தனுஷ்

’பவர் பாண்டி’ படம் மூலம் விமர்சன ரீதியில் இயக்குநராக பெயர் வாங்கிய தனுஷ்,, ‘ராயன்’ படத்தை இயக்கி, நடித்து வசூல் ரீதியிலும் வெற்றி கண்டார். இப்போது ‘இட்லி கடை’ எனும் படத்தில் நடித்து, அதை இயக்கி வருகிறார்.

விஷால்

மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் நடித்தார். வித்தியாசமான ஆக்‌ஷன் படமாக இருந்ததால் ரசிகர்கள் ரசித்தனர்.

பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்போது ‘துப்பறிவாளன்-2’ படத்தை நடித்து, தயாரித்து, இயக்கி வருகிறார் விஷால்.

சரவணன்

சரவணன் நடித்து இயக்கிய படம் ‘தாயுமானவன்’. தன் மார்க்கெட்டை நிலைநிறுத்த இந்தப் படத்தை தாமே தயாரித்து இயக்கினார். ஆனால் நஷ்டம் ஆனபிறகே குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் சரவணன்.

ராகவா லாரன்ஸ்

தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் ‘மாஸ்’ படம் மூலம் இயக்குநரான ராகவா லாரன்ஸ், ‘முனி’, ‘காஞ்சனா 1, 2, 3’ படங்களை இயக்கி நடித்தார். ‘காஞ்சனா’ இந்தி மறுபதிப்பான ‘லட்சுமி’யில் அக்‌ஷய்குமார் நடிக்க ராகவா இயக்கினார். அதுவும் பெரிய வெற்றியைக் கண்டது.

ரஞ்சித்

ரஞ்சித் தன்னைத் தோல்வியில் இருந்து மீட்டெடுக்க காவல்துறை அதிகாரியாக நடித்து, தயாரித்து, இயக்கிய படம் ‘பீஷ்மர்’.

தமிழக வடமாவட்ட கிராமமான ‘தூசி’ எனும் ஊரில் ஒரு காவலருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியையும் அவரை ‘மனநிலை சரியில்லாதவர்’ என முத்திரைக் குத்தப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டதையும் அப்படியே இயல்பாக திரையில் கொண்டு வந்திருப்பார் ரஞ்சித்.

அவரின் நடிப்பும் அவருக்குப் போட்டியாக தேவயானியின் நடிப்பும் அற்புதம். நல்ல படம். ஆனால் ‘நல்லதுக்கு காலமில்லை’ என்பது போல ‘நல்லதுக்கு காசும் இல்லை’ என வசூல் வாட்டியது.

இப்படத்தால் உண்டான பொருளியல் நெருக்கடியால் ரஞ்சித் பல பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

சிலருக்கு வெற்றி என்பது எளிதில் கிட்டிவிடும். ஆனால் பெரும்பாலானவர்கள் போராடித்தான் வெற்றியைப் பெறுகிறார்கள்.

வாழ்க்கையே போராட்டம்தானே. அதனால்தான் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் போராடுகிறார்கள். இந்த உலகில் போராடுபவருக்கே பொற்காலம்!

குறிப்புச் சொற்கள்