கொம்புசீவி: விஜயகாந்த் மகனின் மறுபிரவேசம்

2 mins read
f99c61f5-6091-4df0-8ad7-c7d91263ebf7
கொம்புசீவி படத்தில் சரத்குமார், சண்முகப் பாண்டியன். - படம்: ஒன் இந்தியா

‘கொம்பு சீவி’ படத்தில் தந்தை விஜய்காந்தைப்போல சண்டை, நகைச்சுவை ஆகியவற்றில் கலக்கி இருக்கிறார் சண்முகப் பாண்டியன்.

தமிழ் சினிமாவில் ‘கேப்டன்’ விஜயகாந்த் ஆக்‌ஷன் நடிகராக அறியப்பட்டாலும், ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையாக நகைச்சுவையிலும் தனி முத்திரை பதித்தவர். கோபமான தருணங்களில் அவர் செய்யும் நகைச்சுவை இயல்பாக இருக்கும். அந்த அபூர்வமான கலவையை ‘கொம்புசீவி’ படத்தில் அவரது மகன் சண்முகப் பாண்டியன் அப்படியே பிரதிபலித்துள்ளார். பல காட்சிகளில் அவர் ‘குட்டி விஜயகாந்த்’ போலவே தெரிவது படத்திற்குப் பெரும் பலம். குறிப்பாக, காவல் ஆய்வாளராக வரும் நாயகி தார்ணிகாவுடனான குறும்புகளிலும் சரத்குமார், முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோருடனான கூட்டணியிலும் கேப்டனின் நகைச்சுவை முத்திரை பளிச்சிடுகிறது. பொதுவாகப் பொழுதுபோக்குப் படங்களில் ஆழமான கதை இருக்காது. ஆனால், இயக்குநர் பொன்ராம் இதில் ஒரு வலுவான வரலாற்றுப் பின்னணியைக் கையில் எடுத்துள்ளார். 1955ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் வைகை அணை கட்டப்பட்டபோது, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வளம் பெற்றன. ஆனால், அணைக்காக மலையடிவாரத்தில் இருந்த 5 கிராமங்கள் நீரில் மூழ்கி இடமாற்றம் செய்யப்பட்டன. வாழ்வாதாரம் இழந்த அந்த மக்கள், பிழைப்புக்காகக் கஞ்சா பயிரிடும் தொழிலுக்குத் தள்ளப்பட்டதை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. நாயகன் சண்முகப் பாண்டியனும் அவரது மாமா சரத்குமாரும் கஞ்சா பயிரிடும் தொழிலைச் செய்வதாகக் காட்டினாலும் அதற்கான சமூகக் காரணங்களையும் அந்தத் தவறான தொழிலின் ஆபத்தான விளைவுகளையும் இயக்குநர் மிகத் தெளிவாகவும் தைரியமாகவும் பதிவு செய்துள்ளார். ‘ரஜினி முருகன்’ படத்திற்குப் பிறகு சில சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் பொன்ராம், மீண்டும் தனது பலமான நகைச்சுவை, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளார். ஊரின் பெரிய மனிதரான ‘ரொக்கப் புலி’ கதாபாத்திரத்தில் சரத்குமார் கச்சிதம். அவருக்கும் மருமகன் பாண்டிக்கும் (சண்முகப் பாண்டியன்) இடையிலான ‘மாமா - மச்சான்’ உறவு மிக அழகாகவும் அழுத்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘ஓ போடு’ பாடல் புகழ் ராணியின் மகளான தார்ணிகா, முதல் படத்திலேயே ஆய்வாளர் ‘லைலா’வாக ஈர்க்கிறார். வெறும் கவர்ச்சிக்காக மட்டுமின்றி, நடிப்பு, நடனம், மிடுக்கு என ஒரு நாயகிக்கான அனைத்து பரிமாணங்களும் அடங்கிய ஒரு நாயகியாகத் திகழ்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா, சுஜித் சங்கர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தின் நாட்டார் தெய்வமான ‘பெத்தண்ணா’ சாமி வழிபாட்டைத் திரையில் காட்டியிருப்பது கதையில் மண் மணம் வீசுகிறது. ஒளிப்பதிவும் கலை இயக்கமும் மலைக் கிராமத்தின் அழகைக் கண்முன் நிறுத்துகின்றன.

அம்மா பாசத்திற்கான காட்சிகளை இன்னும் சற்று ஆழப்படுத்தியிருக்கலாம். அதேபோல், வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் புத்திசாலித்தனமாக வடிவமைத்திருக்கலாம். இருப்பினும், லாஜிக் பார்க்காமல் ரசிக்க வேண்டிய இந்தப் படம், ரசிகர்களைச் சோதிக்காத, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு சித்திரமாக வெளிவந்திருக்கிறது கொம்புசீவி.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்