தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளியானது ‘கோட்’ திரைப்படம் ; விஜய் ரசிகர்கள் உற்சாகம்

2 mins read
73629f9e-f6d9-4429-98a0-338ddbb47992
‘கோட்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் ‘கோட்’ படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் தனது ரசிகர்களுடனும் மனைவியுடனும் கண்டு ரசித்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம், உலகெங்கும் வியாழக்கிழமை வெளியீடு கண்டது.

அவரது ரசிகர்கள் இந்நிகழ்வை ஒரு திருவிழாவைப் போன்று கொண்டாடி வருகின்றனர்.

‘கோட்’ படம் உலகம் முழுவதும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு கண்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,100 திரைகளை ஆக்கிரமித்துள்ளது.

வியாழக்கிழமை வெளியான பிறகு, படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் வெளியாகின.

படம் தாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது என்றும், சிவகார்த்திகேயனும் நடிகை திரிஷாவும் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்திருப்பது வியப்பளித்துள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அருமை என்றும் பலர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள திரையரங்கில் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் ‘கோட்’ படத்தின் சிறப்புக் காட்சியை கண்டு ரசித்துள்ளார் விஜய்.

அவருடன் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரும் இருந்தனர்.

படம் முடிவதற்குள், விஜய் திரையரங்குக்கு வந்திருப்பதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அந்தப் பகுதியில் திரண்டுவிட்டனர்.

இதற்கிடையே, ‘கோட்’ படத்தின் முதல் காட்சியை நடிகை திரிஷா கண்டு ரசித்துள்ளார். அவருடன் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷும் இப்படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கில் கண்டுகளித்தார்.

விஜய் நடித்த படங்களில் வசூல் பட்டியலில் ‘கோட்’ முதல் இடம் பிடிக்கும் என்று ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்