‘குடும்பஸ்தன்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன்.
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் இது. யூடியூப் தளத்தில் வெளியான ‘நக்கலைட்ஸ்’ தொடரை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.
“இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்பு சாகசங்கள் நிரம்பிய கதையைப் படமாக்குவதே எங்கள் விருப்பமாக இருந்தது. ஆனால் ஒரு குடும்பத்தை வழிநடத்திச் செல்லும்போது எதிர்கொள்ளும் சாகசங்களையும் சவால்களையும் எண்ணிப் பார்த்தால் அதுவே மிகப் பெரிய சாதனை எனத் தோன்றியது.
“ஒரு குடும்பஸ்தன் வழக்கமான அம்சங்களைக்கூட எவ்வாறு சிரமப்பட்டு கடந்து வருகிறான் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்த முயன்றுள்ளோம்,” என்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி.
“மணிகண்டனைப் பொறுத்தவரை நம்மில் ஒருவர் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தக் கூடியவர். ஒரு கதாநாயகனின் வெற்றிக்குத் தேவைப்படும் முக்கியமான அம்சம் இது. அவரால் எந்த ஒரு வேடத்திலும் அனாயசமாக நடிக்க முடியும். அந்த வகையில் இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
“அனுபவம் கொடுத்துள்ள பக்குவம், கடந்து வந்த பாதை, சினிமா மீதான காதல், ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் அக்கறை ஆகிய அனைத்தும் மணிகண்டனுக்கு இப்போது கைவந்துள்ளன.
“அவர் ‘குட் நைட்’ படத்தில் நகைச்சுவையையும் எளிதாக கைக்குள் கொண்டுவந்தார். கதாபாத்திரத்தின் குணாதிசயம், அதை ஏற்கும் நடிகர்களிடம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வெளிப்படும் நடிப்பை திரையில் பார்க்கும்போது அழகாகவும் அருமையாகவும் இருக்கும். அதனால் மணிகண்டனுக்கும் நடிகர் குரு சோமசுந்தரத்துக்கும் இடையே ஒருவிதப் போட்டி நிலவியது.
“இரண்டு பேருமே படத்தை தூக்கிப்பிடிக்க தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். அதனால் அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“கதாநாயகியாக சான்வி மேஹனா நடித்துள்ளார். மேலும் ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா, பாலாஜி சக்திவேல் என நன்கு அறிமுகமான முகங்களையும் திரையில் பார்க்க முடியும். ’நக்கலைட்ஸ்’ தொடரில் நடித்தவர்களும் இப்படத்தில் பங்களித்துள்ளனர்.
“என் நண்பன் பிரசன்னா கதை, திரைக்கதை, வசனமும் எழுதியதுடன் நடித்தும் உள்ளார்.
“இந்தப் படத்தைப் பார்க்கும் எல்லாரும் அவரவருக்குப் பிடித்தமான ஓர் இடத்துடன் ஒன்றிப்போவார்கள். இந்தப் படம் நல்லவிதமாக வியாபாரமாக வேண்டும், படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற நியாயமான ஆசைகள் போக, சில திரைப்படங்களில் நம்முடைய அடையாளமும் இருப்பது தெரிய வேண்டும் என ஆசைப்படுவோம் அல்லவா, அப்படி எங்கள் அனைவருக்கும் சினிமாவில் நல்ல இடத்தைப் பெற்றுத்தரும் படமாகவும் இது அமைய வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் ராஜேஷ்வர் காளிசாமி.