தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து வீடுகளிலும் நடக்கும் கதையைக் கொண்டு உருவாகி உள்ளது ‘குடும்பஸ்தன்’ திரைப்படம்

2 mins read
38d00787-a741-4270-98c2-1b30ea6d4f16
‘குடும்பஸ்தன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் மணிகண்டன், ஷான்வி. - படம்: ஊடகம்

வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் படம் ‘குடும்பஸ்தன்’.

எதிர்வரும் 24ஆம் தேதி திரைகாண உள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியானது.

அந்த விழாவில் பேசிய இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, தன்னுடைய கனவை நனவாக்குவதில் தனது குடும்பத்தாரின் ஆதரவு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

மேலும் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“இப்படத்தில் நடித்த முத்தமிழ், நிதி, ஜென்சன் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள அடுத்த நாகேஷ் என ஜென்சனைக் குறிப்பிடலாம்.

“எழுத்தாளர் பிரசன்னா நல்ல கதைகளைத் தருவதுடன் நிற்காமல் பல்வேறு வகையிலும் எனக்கு வழிகாட்டியுள்ளார். இப்படிப்பட்டவர்களின் ஆதரவால் இந்தப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது,” என்றார் இயக்குநர் ராஜேஷ்வர்.

இதையடுத்து பேசிய படநாயகன் மணிகண்டன், இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராஜேஷ்வர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டார்.

அந்த சமயத்தில் ‘குட்நைட்’, ‘லவ்வர்’ ஆகிய படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டதால் ‘குடும்பஸ்தன்’ படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை எனவும் கூறினார்.

“எனினும் எனக்காக இதுநாள் வரை காத்திருந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு என் நன்றி. இன்றைய தேதியில் ஒரு குடும்பத்துக்கு யாரேனும் ஒருவர் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்வதே பெரிய சாதனை என்றாகிவிட்டது. இந்த சுவாரசியமான உண்மையை அப்படியே காட்சிப்படுத்தியுளார் இயக்குநர்.

“என் வாழ்க்கையில் அதிகம் சண்டை போட்டவர்களில் இயக்குநர் ராஜேஷ்வரும் ஒருவர். இருவருக்குமே தொழில் பக்தி அதிகம். அதனால்தான் அடிக்கடி சண்டை வருகிறது என்பதை அவர் புரிந்துகொண்டார்.

“திரைத்துறையில் ஓரளவு பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாக இருக்கிறது,” என்றார் மணிகண்டன்.

படநாயகி ஷான்வி பேசும்போது, இப்படத்தின் கதை அனைத்து வீடுகளிலும் நடப்பதுதான் என்றார்.

“பெரும்பாலானோர் பல்வேறு குடும்ப சவால்ககளைக் கடந்து வந்திருப்போம். முன்னோட்ட காட்சித் தொகுப்பை பார்த்து எப்படி ரசித்து சிரித்தீர்களோ அதேபோன்றுதான் இந்தப்படமும் இருக்கும்,” என்று உத்தரவாதம் அளித்தார் ஷான்வி.

குறிப்புச் சொற்கள்