ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘மதராஸி’.
அப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது.
வெற்றி தோல்விகளில் உடனிருக்கும் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவா, தான் தொகுப்பாளராக இருந்தபோது தமக்கு கிடைத்த அனுபவத்தை அந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.
14 ஆண்டுகளுக்குமுன் சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ பட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு தமக்குக் கிட்டியதாக அவர் கூறினார்.
தொகுப்பாளர் வேண்டாம் வேறு பிரபலமான நாயகரை வைத்து நிகழ்ச்சியை நடத்த எண்ணிய படக்குழு நடிகர் ஜெய்யை வைத்து அந்நிகழ்ச்சியை நடத்தியதாகச் சிவா சொன்னார்.
“அந்த வாய்ப்பு கைநழுவிப் போகவே நான் மிகவும் வருந்தினேன். அப்படத்தின் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கி எப்படியாவது இயக்குநர் முருகதாசிடம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாங்கிவிடலாம் என நான் எண்ணியிருந்தேன்.
“அதன்பிறகு அவருடைய தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தின் விழாவில் இயக்குநர் சங்கர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என முருகதாஸ் கூறியிருப்பார். அதற்காக என்னை எல்லோரும் கிண்டல் செய்தனர். என் உழைப்பை மட்டுமே நம்பியிருந்த நான் தற்போது இந்த இடத்தில் வந்து நிற்கிறேன்,” என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
“ஷாருக்கான் நடிக்க வேண்டிய கதையில் நான் நடிப்பதாகப் பலர் கூறி வருகின்றனர். எஸ்ஆர்கே படத்தில் இந்த எஸ்கே நடித்ததே பெரிய வரம் என அந்த விமர்சனத்திற்கு நான் பதிலளித்து வருகிறேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமன்றி, “விஜய்யுடன் சேர்ந்து நான் நடித்ததற்கு பலர் மகிழ்ச்சி அடைந்தாலும், சிலர் இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார் எனக் கிண்டல் செய்தனர்.
“அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான். அவர்கள் கூறுவதுபோல் விஜய் நினைத்திருந்தால் ‘கோட்’ படத்தில் எனக்குத் துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார். நானும் அவ்வாறு நினைத்திருந்தால் அதை வாங்கியிருக்கமாட்டேன்.
“நான் அவருடைய ரசிகர்களை ஈர்க்கப் பார்க்கிறேன் எனவும் சிலர் கூறுகின்றனர். யாருடைய ரசிகர்களையும் யாராலும் ஈர்க்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்,” எனத் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குச் சிவா பதிலளித்தார்.
‘அமரன்’ படம் பற்றி பேசிய அவர், “அமரன் படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு ஒரு மூதாட்டி என்னைப் பார்க்க வந்தார். அப்படத்தில் நீங்கள் இறந்ததைப் பார்த்து எனக்குத் தூக்கமே வரவில்லை. இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வேண்டாம்,” என அந்த மூதாட்டி தம்மைக் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

