நடிகர் அஜித்தின் கார் பந்தயப் பயணத்தை முழுமையான ஒரு ஆவணப் படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். இதற்காக அஜித் மலேசியா சென்றபோது இவரும் உடன் சென்றிருந்தார்.
மலேசியாவுக்கு இவரை அழைத்த அஜித், அங்கு ஆவணப்படம் தொடர்பாக கலந்து ஆலோசித்துள்ளார். அங்கேயே உடனுக்குடன் ஆவணப் படத்துக்கான காட்சிகள் சிலவற்றைத் திட்டமிட்டு படமாக்கத் தொடங்கிவிட்டார் ஏ.எல்.விஜய்.
இது குறித்து அவர் கூறுகையில், அஜித்தின் கார் பயணம் தொடர்பான இந்தப் படப்பிடிப்பு அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது என்றார்.
“இது ஆவணப் படமாக அல்லாமல் திரைப்படமாக வெளியிட அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரசிகர்களின் கோரிக்கை எனக்கும் உற்சாகம் தருகிறது. எனினும் அனைத்து காட்சிகளையும் படமாக்கிய பிறகுதான் ஆவணப்படமா, அல்லது திரைப்படமா என்பது முடிவாகும்.
“இதுவும் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கார் பந்தயம் என்பது மிகவும் கடினமானது, சவாலானது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து ஆதரவு தருகிறார்கள். அதே போல் வரும் காலத்தில் கார் பந்தயப் போட்டிகளையும் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் விருப்பம்,” என்று ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.
அஜித் நடித்த ‘கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் இவர். அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றார்.
இன்றளவும் அஜித்தின் நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் விஜய்க்கும் இடம் உண்டு. மேலும், அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தைத் தயாரித்தவர் விஜய்யின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஏ.எல்.விஜய் இதற்கு முன்பு ‘பொய்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் இரண்டு நிறுவன விளம்பரங்களில் நடிக்கிறார். அவற்றை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். இவ்வாறு நண்பர்களுக்கு வாய்ப்பு அளித்து உதவி வருகிறார் அஜித்.

