நயன்தாரா, சிரஞ்சீவி நடித்த ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தை வசூலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது. தெலுங்குத் திரையுலகில் சிறப்பான தொடக்கத்துடன் இந்த ஆண்டு மூன்று தொடர் வெற்றிகளை கொண்டாடத் தயாராக இருக்கிறார் நயன்தாரா.
கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளியானது. அதுவும் நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் இணைந்து நயன்தாரா நடித்த ‘டெஸ்ட்’ திரைப்படம் இணையத்தள ரசிகர்களிடையேயும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
கடந்த 2025ஆம் ஆண்டு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கும் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. ஆனால், இந்த ஆண்டு இருவருக்கும் வரவேற்கத்தக்க ஆண்டாக அமையப்போவது உறுதி என்கிறது கோலிவுட்.
பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா 2’ திரைப்படத்தை விட, சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த ‘மன சங்கர வரபிரசாத் காரு’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், முதல் நாளிலேயே 84 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படம் முதல் நாளில் 102 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், 4 நாட்களில் 201 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது. அந்தப் படம் பெரும் பொருள்செலவில் எடுக்கப்பட்டுத் தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆனால், குறைந்த பொருள்செலவில் எடுக்கப்பட்ட சிரஞ்சீவி - நயன்தாரா திரைப்படம், பொங்கல் பண்டிகையின் வெற்றியாளராக மாறியுள்ளதாகத் தெலுங்குத் திரையுலக வசூல் கணிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக நயன்தாராவுக்குப் பிரம்மாண்ட வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில், அவர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மேலும் இந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி, கே.வி.என். தயாரிப்பில் யஷ்ஷுடன் நயன்தாரா நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படமும் வெளியாகிறது. கண்டிப்பாக அந்தப் படம் 1,000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தெலுங்கு, கன்னடப் படங்களைத் தொடர்ந்து, தமிழிலும் நயன்தாராவுக்குக் கோடைக் காலத்தில் ஒரு படம் வெளியாகவுள்ளது.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம், இந்த ஆண்டு கோடை விடுமுறை வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு நயன்தாராவுக்கு மூன்று தொடர் வெற்றிகள் உறுதி என்றே தெரிகிறது. மேலும், கவினுடன் நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ படமும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ் என கடந்த ஆண்டு வெளியீடு தள்ளிப்போன விக்னேஷ் சிவனின் படம் இந்த ஆண்டு வெளியாகி ரூ. 100 கோடி வசூலில் சாதனை படைத்தால், நயன்தாராவிற்கு இந்த ஆண்டு அமோகமான ஆண்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

