மொழிவளம் எனது பலம்: அய்ரா

3 mins read
90a05c4c-e6a4-4083-9400-99e9b11e2b6c
அய்ரா கிருஷ்ணா. - படம்: ஊடகம்

‘காந்தாரா சாப்டர்-1’ படத்தில் அழுத்தமான, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை அய்ரா.

கர்நாடகாவைச் சேர்ந்த இவருக்கு, மங்களூரில் உள்ள பட்கலா கிராமம்தான் சொந்த ஊர்.

திரையுலகம், சமூகப் பிரச்சினைகள், நவீன தொழில்நுட்பம் குறித்தெல்லாம் பெரிதாக எந்தவித புரிதலும் இல்லாத, வெள்ளந்தியான மக்கள் வாழும் கிராமம் அது.

தந்தை கிருஷ்ணா வணிக வளாகங்களில் திரையரங்குகள் இடம்பெறுவதற்கு முந்தைய காலத்தில் சாதாரண திரையரங்குகளில் சிற்றுண்டி சாலை நடத்தியவர். அம்மா பிரபாவதி இல்லத்தரசியாக இருந்தபடி கணவருக்கு முடிந்த உதவிகள் செய்துள்ளார்.

தந்தையின் தொழிலுக்கு உதவ, தன் அம்மாவுக்குப் போட்டியாக அய்ராவும் அப்பா செல்லும் திரையரங்குக்கு உடன் சென்றுள்ளார். அங்கு பல்வேறு திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு அமைந்ததால் சிறு வயதிலேயே சினிமா மீதான ஈர்ப்பு அதிகமாகிவிட்டதாம்.

கல்லூரி நாள்களில் அய்ராவின் அழகு முகமும் வசீகரத் தோற்றமும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. பார்த்தவர்களில் பெரும்பாலானோர், ‘ஏன் மாடலிங் செய்யக்கூடாது? விளம்பரங்களில் நடிக்கலாமே’ என்றெல்லாம் சொல்லி ஊக்கப்படுத்தி உள்ளனர்.

அதனால் படித்துக்கொண்டே மாடலிங் செய்துள்ளார். அதன் பிறகு பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடித்த அய்ரா, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார்.

அவ்வப்போது பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தபோது, அதைத் தவறாமல் பயன்படுத்திக்கொண்டாராம்.

“எல்லாருக்குமே வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நாம் என்ன செய்கிறோம், என்ன விரும்புகிறோம் என்பதைச் சோதித்துப் பார்க்கும் சுய மதிப்பீட்டுக்கான நேரம் வரும். அப்படியான ஒரு தருணத்தில் சினிமா நடிகையாக வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டேன்.

“அதன் பலனாக ‘நன்னபிரகாரா’ என்ற கன்னடப் படத்தில் சிறிய வேடம் கிடைத்தது. அதுதான் நான் முதன்முதலாக வெள்ளித்திரையில் தோன்றிய தருணம்.

“அடுத்து தமிழில் ஜிவி பிரகாஷுடன் ‘ரெபல்’ படத்தில் நடித்தேன். ‘நிறம் மாறும் உலகில்’ படத்தில் இடம்பெற்ற ‘ராக்கம்மா’ பெரும் வரவேற்பைப் பெற்றது,” என்று தாம் கடந்து வந்த பாதையை அண்மைய ஊடகப் பேட்டியில் சுவாரசியமாக விவரித்துள்ளார் அய்ரா.

“ரசிகர்கள் மனத்தைக் கவரும் வகையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த வேளையில்தான் ‘காந்தாரா’ பட வாய்ப்பு தேடி வந்தது.

“கதைப்படி, வில்லனின் மனைவியாக சில காட்சிகள் மட்டுமே வந்துபோனாலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக எல்லாரும் பாராட்டுகிறார்கள்.

“பேரளவில் வெற்றி பெற்ற படத்தில் நடித்ததன் பலனாக, இப்போது மூன்று கன்னடப் படங்களில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளேன்,” என்று உற்சாகத்துடன் சொல்லும் அய்ராவுக்கு, ஆறு மொழிகள் அத்துபடியாம்.

இந்த மொழியாற்றல் பல வகையிலும் கைகொடுப்பதாகச் சொல்கிறார்.

சினிமாவில் நடிக்கப் போவதாகச் சொன்னதும், வீட்டில் தொடக்கத்தில் எதிர்ப்பு கிளம்பியதாம். எனினும், பெற்றோர் பிறகு சம்மதித்துள்ளனர்.

“இப்படிப்பட்ட பெற்றோர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமாவில் நான் அடைந்துள்ள வளர்ச்சி, கிடைத்து வரும் புது வாய்ப்புகளைப் பார்த்து அவர்கள் பெருமைகொள்வது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

“துளு, தெலுங்கு, கன்னடம், தமிழ், ஆங்கிலம், இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடிக்க விரும்புகிறேன். மொழி பலத்தால் எனது நடிப்புத் திறனை எந்தவிதத் தடுமாற்றமும் செயற்கைத்தனமும் இல்லாமல் வெளிப்படுத்த முடியும்,” என்று சொல்லும் அய்ராவுக்குப் பிடித்த நடிகர் ரஜினி, பிடித்த விளையாட்டு கிரிக்கெட்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பிறரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் இவரின் கொள்கையாம்.

குறிப்புச் சொற்கள்